சிறுவயதில் தந்தையின் இழப்பு.. பேனா பிடிக்கும்கைகளில் கீ-போர்டு.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் கதை!
- சிறுவயதில் தந்தையின் இழப்பு.. பேனா பிடிக்கும்கைகளில் கீ-போர்டு.. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் கதையை, அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.
(1 / 6)
இசைப்புயல். இசைப்புதிரும் கூட. ஆம். ஏ.ஆர். ரகுமான் தான் அவர். இசைச்சாரலாகவும், இசை மழையாகவும், சலசலக்கும் நதியின் ஓசையும், மௌனமாக பூக்கும் பூவின் ஓசையையும் புதிதாக கொண்டு வந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு திரும்பி பார்க்கலாம். மலையாள இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு மகனாக 1967 ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பதினோராம் வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்தார்.
(2 / 6)
எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதனிடமும் பணி புரிந்தார். மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜிடம் கற்றார். நிறைய விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தார். 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படம் இவரின் இசையில் முதல் படமாக வெளியானது. முதல் படத்திலேயே முந்தைய காலகட்டத்தின் இசையை போல இல்லாமல் புது மாதிரியாக ரசிகர்களை உணர வைத்தார். ரோஜாவின் பாடல்களும் பின்னணி இசை கோர்ப்பும் ரசிகர்களை புதிதாக கொண்டாட வைத்தது. எல்லோரது கவனமும் இவர் மேல் விழுந்தது.
(3 / 6)
ரோஜாவில் ஆரம்பித்த பயணம் புயல் வேகமாக இந்திய எல்லைகளை கடந்து உலகெங்கும் பரவியது. இசைக்கு ஏது மொழி என்பது போல தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று தனது எல்லையை விரித்தார்.
(4 / 6)
பலமுறை ஃபிலிம்பேர் விருதுகள், பல மாநில அரசு விருதுகள், பல முறை தேசிய விருதுகளை இவரின் கைகள் சுமந்தன. "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற ஆங்கில படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருதுகளை பெற்ற முதல் இந்தியர் ஆவார். இதே படத்தில் இசை அமைத்தமைக்காக ஆஸ்கர் விருதையும் பெற்று தந்தது. உலகின் எந்த விழா மேடையிலும் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற வார்த்தைகளை சொல்லத்தவறுவதில்லை. அது ஆஸ்கர் விருது மேடையாக இருந்தாலும் சரி.
(5 / 6)
கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரிபவர். இசையில் புதுமையை கொண்டு வந்தவர். திரைப்படம் மட்டும் இன்றி தனிப் பாடல்களை ஆல்பமாக வெளியிடுவதும் இசைக்கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் -சைரா பானு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் சகோதரி ரைஹானா அவர்களின் மகன் தான் இசை அமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ்.
(6 / 6)
மகள் கதீஜாவின் திருமணத்தில் ஒன்றாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சைரா பானு தம்பதியினர், சமீபத்தில் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். கதீஜாவுக்கு ரஹீமா என்ற சகோதரியும், அமீன் என்ற சகோதரரும் உள்ளனர்.
"சின்ன சின்ன ஆசை" என்ற பாடலோடு ரோஜாவில் ஆரம்பித்த பயணம் ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெறவைத்தது. அவரின் பணிவும் அன்பும் அவரை இன்னும் சிகரம் தொட வைக்கும். அவரது பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் தோன்றும்.
மற்ற கேலரிக்கள்