World Wetlands Day: கடல் அலைகளிலிருந்து பாதுகாப்பு அரண்.. 40% விலங்கு மற்றும் தாவரங்களின் வாழ்விடம் - உலக ஈர நிலம் தினம்
World Wetlands Day: கடல் அலைகளின் கோரத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அரணாக சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. பூமியில் 6 சதவிகிதம் மட்டுமே இந்த நிலங்கள் இருந்தாலும், நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமான விலங்கு மற்றும் தாவர இனங்கள் இந்த நிலங்களில் வாழ்கின்றன

உலக ஈர நில அல்லது சதுப்பு நில தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 02 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இயற்கையின் கொடையான ஈர நிலம், சதுப்பு நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலங்கள் நமக்கு பல நன்மைகளை தருகின்றன. அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் இவை திகழ்கின்றன.
கடல் அலைகளின் கோரத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அரணாக இருக்கும் சதுப்பு நிலங்கள் சுனாமி அலைகளை தடுக்கிறது. கடல் நீர் நிலத்தினுள் புகாமல் தடுப்பதுடன், வெள்ள நீரை உள்வாங்கி வெள்ள சேதத்தையும் தடுக்கிறது. இந்த நிலங்களில் வாழும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்ற நிலப்பகுதியை விட வேறுபட்டு நிற்கும். இது இருவகைப்படும். அவை கடலோர உப்புநீர் சதுப்பு நிலம், இன்னொன்று நன்னீர் சதுப்பு நிலம்
ஈர நிலம் என்னும் சதுப்பு நிலம் என்பது ஆண்டு முழுவதும் நீர் நிற்கும் அல்லது 6 மாதங்கள் தாழ்ந்த நிலங்களில் இயற்கையாகவே நீர் நிற்கும் நீர் சார்ந்த நிலப்பகுதியாகும். ஈர நிலங்கள் உயிரினங்களின் பல்லுயிர் தன்மையை கொண்டிருப்பதால் இந்த நிலங்கள் பூமியின் 'பச்சை நுரையீரல்' எனப்படுகிறது
ஈர நில தினம் வரலாறு
1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் (Ramsar) எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் “ராம்சார் ஒப்பந்தம்” கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக ஈர நிலங்களின் தன்மையை அறிவார்ந்த பயன்பாட்டின் மூலம் அதனுடைய சூழலியல் தன்மைகெடாமல் நீடிக்கச் செய்வதாகும். ராம்சார் ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ஆம் தேதியை குறிக்கும் விதமாகவே, ‘உலக சதுப்பு நில தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ராம்சார் அமைப்பில் இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்பு நிலங்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 25 சதுப்பு நிலங்கள் தகுதி வாய்ந்த நிலங்களாக உள்ளன. அதில் தமிழகத்தில் கோடியக்கரை வன உயிரிகள் சரணாலயம், பழவேற்காடு ஆகியவை அடங்கும்.
ஈர நில தினம் முக்கியத்துவம்
ஒவ்வொரு ஆண்டும், மனித உயிர்களுக்கும் கிரகத்துக்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உலக சதுப்பு நில தினத்தில் ஏற்படுத்தப்படுகிறது.
நமது உடலை எப்படி சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் மிக முக்கியமான உறுப்பாக இருக்கிறது. அதை போல் பூமியின் சிறுநீரகங்களாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. சதுப்பு நிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்தும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வைப்பது இந்நாளின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது.
சதுப்பு நிலங்கள் மக்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக்கும், பூமிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பெரும்பாலும் இயற்கையாவோ அல்லது செயற்கையாகவோ நிலையான அல்லது பாயும் நீரோட்டம் கொண்டதாக இருக்கும்
இயற்கையான ஈர நிலங்கள் என்பவை சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், இயற்கை நீர், குளங்கள், குட்டைகள், ஏரிகள் முதலானவையாக உள்ளன. இத்தகைய ஈர நிலங்களை சேத்து நிலம், சகதி நிலம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப ஈர நிலங்கள் அந்த நாட்டின் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் சுந்தரவன காடுகள், தென் அமெரிக்காவின் அமேசான் வடி நில பகுதி, ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரி, காங்கோ நதி முகத்துவார பகுதிகளிலும், ரஷ்யாவின் வோல்கா நதி பாயும் மத்திய சமவெளி பகுதிகளிலும் சதுப்பு நிலங்கள் உள்ளன. ஈர நிலங்கள் பூமியில் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளன. ஆனால், நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமான விலங்கு மற்றும் தாவர இனங்கள் ஈர நிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்களில் வாழ்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன.
ஈர நில தினம் 2025 கருபொருள்
"நமது பொதுவான எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாத்தல்" என்பது இந்த ஆண்டுக்கான ஈரநில தினம் கருபொருளாக உள்ளன. அனைத்து மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஈரநிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்