World Malaria Day 2024: உலக மலேரியா தின வரலாறு, முக்கியத்துவத்தை அறிவோம்…மலேரியாவை கட்டுப்படுத்துவது எப்படி?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Malaria Day 2024: உலக மலேரியா தின வரலாறு, முக்கியத்துவத்தை அறிவோம்…மலேரியாவை கட்டுப்படுத்துவது எப்படி?

World Malaria Day 2024: உலக மலேரியா தின வரலாறு, முக்கியத்துவத்தை அறிவோம்…மலேரியாவை கட்டுப்படுத்துவது எப்படி?

Karthikeyan S HT Tamil
Published Apr 25, 2024 05:40 AM IST

World Malaria Day 2024: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேரியா நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

உலக மலேரியா தினம்
உலக மலேரியா தினம்

மலேரியா நோய்

மலேரியா என்பது ஓர் ஒட்டுண்ணி. கொசு மூலம் பரவும் நோய்களில் மலேரியா முதன்மையான நோய் ஆகும். இது கொசுவினால் ஒருவர் உடலில் இருந்து இன்னொருத்தருக்கு கடத்தப்படுகிறது. மலேரியா கொசுக்களால் பரவும் மிகவும் ஆபத்தான நோயாக மற்றும் உயிர்கொல்லியாக இந்நோய் உள்ளது. பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை பாதித்த ஒரு நோயான மலேரியா, உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் ஒரு குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் உயிரிழந்து போனார்கள். இதில் 80 சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்கிறது அந்த கணிப்பு.

மருத்துவ தொற்றுநோயியல் மற்றும் உலகளாவிய சுகாதார இதழில் வெளியிடப்பட்ட 2024 ஆய்வின்படி, தென்கிழக்கு பிராந்தியத்தில் உலகளாவிய மலேரியா பரவல் 79% இந்தியாவில் உள்ளது.

மலேரியா தினம்

உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் உலக மலேரியா தினத்தை கடந்த 2007-ல் அனுசரித்தது. ஒவ்வொரு ஆண்டும், உலக மலேரியா தினத்தைக் கடைப்பிடிக்க ஒரு புதிய கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 'அதிக சமத்துவமான உலகத்திற்காக மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை விரைவுபடுத்துங்கள்' என்ற கருப்பொருளின் கீழ் உலக மலேரியா தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.

மலேரியாவின் அறிகுறி

குளிர் காய்ச்சல், பசியின்மை, உடல் வலி, வாந்தி, வியர்வையுடன் தலைவலி, தசை வலி, தொண்டை புண், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல், உடல் நடுக்கம் அதைத்தொடர்ந்து வியர்த்தல் இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடருதலும் அறிகுறிகளாகும்.

பரிசோதனை

எளிய ரத்த பரிசோதனை மூலம் மலோரியா காய்ச்சலை கண்டறியலாம். பரிசோதனையில் மலேரியா எனக் கண்டறிந்தபின் உரிய சிகிச்சையை தொடங்கினால் குணப்படுத்திவிடலாம்.

பாதுகாப்பாக இருக்க சில வழிகள்

மலேரியா நோய் பரவக் காரணம் கொசுதான். எனவே, கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. நீர்த்தேக்கத்தால் கொசு பெருகிட, அதனால் மலேரியா நோய் வேகமாகப் பரவுகிறது. வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும்.கொசுவர்த்தி சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலோரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும். குடிக்க அல்லது குளிக்க தண்ணீர் சேமித்து வைத்தால், அதை மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து கொசுக்கள் தங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொதுமருத்துவமனைகள், மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு முறை மலேரியா வந்துவிட்டால் அந்நோயாளிகள் ஒரு வருடத்துக்கு நிச்சயம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் தவறாது உரிய மருந்துகளை உட்கொள்ளுதல் அவசியமாகும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மலேரியா நோய் கண்டறிந்தால் தவறாது உரிய முறையில் மலேரியா மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

கொசுக்களை ஒழித்து பாதுகாப்புடன் இருப்போம்..மலேரியாவுக்கு முடிவு கட்டுவோம்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.