Malaysia : பரிதாபம்.. தெரியாமல் விஷ மீனை சாப்பிட்ட தம்பதி..பெண் பலி..கணவர் கோமா!
மலேசியாவில் பபர் மீன் சாப்பிட்டு 83 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது கணவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜப்பான் கடலில் அதிகம் காணப்படும் மீன் பபர். இந்த பபர் மீன் கொடிய நச்சுத்தன்மை கொண்ட மீன் வகையாகும். இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது.
ஆனால் முறையாக பயிற்சி பெற்ற சமையல்காரர்களால் மட்டுமே அதன் விஷத்தன்மையை அகற்றிவிட்டு சமைக்க முடியும். சாதாரணமாக வீட்டில் அதனை சமைத்து சாப்பிட முடியாது. இந்த நிலையில் மலேசியாவில் முதியவர் ஒருவர் கடந்த வாரம் பபர் மீனின் விஷத்தன்மை குறித்து அறியாமல் அதனை சமையலுக்கு வாங்கி சென்றார்.
அங்கு அவரது மனைவி(83) அந்த மீனை வைத்து ஜப்பானிய உணவை சமைத்தார். பின்னர் இருவரும் அதை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலன் இன்றி மூதாட்டி உயிரிழந்தார். முதியவர் கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர்களின் மகன் கூறுகையில், "என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் வியாபாரியிடம் தான் மீன் வாங்குகிறார்கள், என் தந்தைக்கு அது விஷம் உள்ள மீன் என தெரியவில்லை. அவர் தெரிந்தே இவ்வளவு கொடிய விஷமுள்ள மீன் ஒன்றை வாங்கி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கமாட்டர்கள்”எனக் கூறினார்.
மேலும், இந்த தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த தேதியில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகம் (PDK) ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உணவைத் தேர்ந்தெடுப்பதில் குறிப்பாக ஆபத்துகள் இருந்தால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்