Hardeep Singh Nijjar: 'பிளம்பர் To பயங்கரவாதி!' யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?
”ஒரு தனிநபரின் மரணம் இருநாட்டு அரசுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது ஏன்? என்பதுதான் அனைவரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது”
காலிஸ்தான் ஆதரவு இயக்க தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது மரணம் அங்கு வாழும் சீக்கிய சமூகத்தவரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை சுட்டுக் கொன்ற இரண்டு நபர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்தியா-கனடா ராஜ்ய உறவில் பிளவு
இக்கொலையின் பின்னணியில் இந்திய ராஜதந்திர நடவடிக்கை இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு இருநாட்டு உறவுகளில் அனலை கக்க செய்துள்ளது. ஜஸ்டீன் ட்ரூடோ பேச்சின் எதிரொலியாக கனடாவுக்கான இந்தியத் தூதர் அடுத்த 5 தினங்களில் நாடு திரும்ப வேண்டும் என இந்திய அரசு அரசு தெரிவித்துள்ள நிலையில் கனடாவை சேர்ந்த இந்திய தூதரை வெளியேறவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு தனிநபரின் மரணம் இருநாட்டு அரசுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது ஏன்? என்பதுதான் அனைவரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.
யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?
பஞ்சாப் காவல்துறை ஆவணங்களின்படி, ஜலந்தரின் ஃபில்லூர் பகுதியில் உள்ள பார்சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பதை அறிய முடிகிறது. தனது வாழ்வாதாரத்திற்காக 1996ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் அந்நாட்டு குடியுரிமை பெற்று பிளம்பராக தனது வாழ்கையை தொடங்கினார்.
சீக்கியர்கள் அதிகமாக வாழும் ’பஞ்சாப்’ மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் நாடு உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் வெளிநாடுகளில் சில சீக்கிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை தவிர்த்து அதிக சீக்கியர்கள் வாழும் நாடான கனடாவில் ’காலிஸ்தான்’ தனிநாட்டிற்கான தாக்கம் அதிகமாக அறியப்படுகிறது.
தனிநாடு கோரும் காலிஸ்தான் சார்பு அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நிஜ்ஜார் செயல்படத் தொடங்கினார். இதனால் அவரது செல்வ நிலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
காலிஸ்தான் புலி படை
ஜக்தார் சிங் தாரா தலைமையிலான பாபர் கல்சா இன்டர்நேஷனலில் சேர்ந்தபோது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான அவரது முயற்சி தொடங்கியது. பின்னர் காலிஸ்தான் புலி படை (Khalistan Tiger Force) என்ற சொந்த அமைப்பை கட்டி எழுப்பினார்.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு எண்ணத்தை கொண்டவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்பு கொண்டு வலைப்பின்னலை ஏற்படுத்துதல், அவர்களுக்கு பயிற்சி மற்றும் நிதி உதவி அளித்தல் ஆகிய செயல்பாடுகளில் நிஜ்ஜார் ஈடுபட்டதாக பஞ்சாப் காவல் அதிகாரிகள் கூறுகின்றனர். மேற்கண்ட குற்றங்களுக்காக அவர் மீது பத்திற்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டது.
தொடர் பயங்கரவாத செயல்பாடுகள்
2014 ஆம் ஆண்டில் பாபா பனியாராவை பர்மிந்தர் காலாவில் கொலை செய்யத் திட்டமிட்டார். 2015 ஆம் ஆண்டில், மன்தீப் சிங் தலிவால் என்பருக்கு கனடாவில் பயிற்சி அளித்து பின்னர் பஞ்சாப்பிற்கு அனுப்பினார். சிவசேனா தலைவர்களை குறிவைத்த மன்தீப் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 2020ஆம் ஆண்டில் மற்றொரு காலிஸ்தான் ஆதரவாளரான அர்ஷ் டல்லாவுடன் கைக்கோர்த்தார். பின்னர் தேரா சச்சா சவுதாவின் சீடரான மனோகர் லால் ஒருவரைக் கொன்றார். லால் 2021ஆம் ஆண்டில் பதிண்டாவின் பக்தா பாய் காவில் உள்ள அவரது அலுவலகத்தில் கொல்லப்பட்டார்.
2021 ஜனவரியில் சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தும் தனது சொந்த கிராமத்தில் குடியேறிய பிரக்யா கியான் முனி என்ற இந்து அர்ச்சகரையும் நிஜ்ஜார் கொல்ல முயன்றார். ஆனால் கியான் முனி எப்படியோ உயிர் பிழைத்தார்" என ஒரு மூத்த காவல் அதிகாரி கூறுகிறார்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து பஞ்சாப்பை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. டல்லாவுடன் கைகோர்த்த பிறகு, நிஜ்ஜார் வெடிமருந்துகள், டிஃபின் மற்றும் கைக்குண்டுகளை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளார். பிப்ரவரி 2022ஆம் ஆண்டில், நிஜ்ஜார் அனுப்பிய வெடிமருந்துகளுடன் மூன்று பேரை சோனேபட் போலீசார் பிடித்தனர்.
பயங்கரவாதியாக அறிவிப்பு
நிஜ்ஜார் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) என்ற அமைப்புடன் உடன் தொடர்புடையவர், இது இந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிறப்பு டிஜிபி ஆர்.என்.தோக் கூறுகையில், நிஜ்ஜாருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஜூலை 1, 2020 அன்று உள்துறை அமைச்சகம் அவரை பயங்கரவாதியாக அறிவித்ததாகவும் கூறுகிறார்.
கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை புத்துயிர் அளிப்பது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜரை நாடு கடத்துமாறு பஞ்சாப் போலீசார் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடா அரசியலில் சீக்கியர்கள்
சீக்கியர்கள் கனடாவில் ஏறக்குறைய 110 ஆண்டுகளாக உள்ளனர். கனடா அரசியலில் பலம் ஆதிக்கம் மிக்க சிறுபான்மை சமூகமாக சீக்கிய சமூகம் விளங்கி வருகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்