Karpoori Thakur: யார் இந்த கர்பூரி தாக்கூர்.. பீகார் முன்னாள் முதல்வர் முதல் பாரத ரத்னா விருது வரை!
பிற்படுத்தப்பட்ட சாதிகளை மேம்படுத்துவதற்காக தனது முயற்சிகளுக்காக அறியப்பட்ட கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு மறைவுக்குப் பின் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"சமூக நீதியின் கலங்கரை விளக்கம், மாபெரும் ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் ஜிக்கு பாரத ரத்னாவை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், அதுவும் அவரது பிறந்த நூற்றாண்டைக் குறிக்கும் நேரத்தில். இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான சாம்பியனாகவும், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலின் உறுதியான வீரராகவும் அவரது நீடித்த முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக தளமான எக்ஸ் இல் பதிவிட்டார்.
"அடித்தட்டு மக்களை மேம்படுத்துவதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அவரது தொலைநோக்கு தலைமை இந்தியாவின் சமூக-அரசியல் துணியில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. இந்த விருது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை கௌரவிப்பது மட்டுமல்லாமல், மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது பணியைத் தொடர எங்களுக்கு ஊக்கமளிக்கிறது ".
பிற்படுத்தப்பட்ட சாதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக தன் வாழ்நாளில் பெரிதும் உழைத்த கர்பூரி தாக்கூருக்கு அவர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
யார் இந்த கர்பூரி தாக்கூர்
பீகாரின் நை சமூகத்தில் பிறந்தார் கர்பூரி தாக்கூர். இவர்டிசம்பர் 1970 முதல் ஜூன் 1971 வரை மற்றும் டிசம்பர் 1977 முதல் ஏப்ரல் 1979 வரை பீகார் முதல்வராக இரண்டு முறை பணியாற்றினார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில், பீகாரில் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க தாகூர் வழி வகுத்தார்.
இந்நிலையில் தற்போது கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது சரியான முடிவு என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார். "இது தலித்துகள், சமூகத்தின் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளிடையே நேர்மறையான அதிர்வை உருவாக்கும். இதை நாங்கள் நீண்ட காலமாக கோரி வருகிறோம்" என்று நிதீஷ் குமார் கூறினார்.
மேலும் இதுகுறித்து மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், ".. முதலில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்பூரி தாக்கூரின் முழு வாழ்க்கையும் ஏழைகள் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது... அவரது பெயரில் அரசியல் செய்பவர்கள் அவருக்காக ஒருபோதும் சிந்திக்கவில்லை, அவர் பெயரில் அரசியல் மட்டும் செய்தனர். காங்கிரசுடன் இணைந்து கட்சிகள் ஆட்சி அமைத்தன, ஆனால் கர்பூரி தாக்கூருக்கு அந்த கௌரவம் கிடைக்கவில்லை என்றார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், “ஜன்நாயக்' கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரராக, ஆசிரியராக, பீகார் முதல்வராக தனது வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். இந்த கௌரவம் பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் விவசாயிகளுக்கு அவரது போராட்டம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு உண்மையான அஞ்சலி” என்று தெரிவித்தார்.
டாபிக்ஸ்