What Is Black Friday: நம்மூரு ஆடித்தள்ளுபடி தான் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்ங்க!

I Jayachandran HT Tamil
Nov 25, 2022 05:04 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டை குறிவைத்துதான் பிளாக் ஃப்ரைடே விற்பனையை பெரும் நிறுவனங்கள் செய்கின்றன.

பிளாக் ஃப்ரைடே கொண்டாட்டம்
பிளாக் ஃப்ரைடே கொண்டாட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதெல்லாம் சரி. அதென்ன பிளாக் ஃப்ரைடே. கருப்பு வெள்ளிக்கிழமை. இந்தப் பெயர்காரணத்துக்கு பெரிய சரித்திரப் பின்னணியே இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள பிளடெல்பியாவில் தான் இந்த கருப்பு வெள்ளிக்கிழமை தோன்றியது. உண்மையிலேயே இதற்கும் ஷாப்பிங்குக்கும் கடுகளவுகூட சம்பந்தமில்லை. கருப்பு வெள்ளிக்கிழமை என்று பிளடெல்பியா மாகாணப் போலீஸார் தான் பெயர் வைத்தனர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு வியாழக்கிழமையன்று நடைபெறும் தேங்க்ஸ் கிவ்விங் என்ற சம்பிரதாயப் பண்டிகைக்கு அடுத்த நாள்தான் கருப்பு வெள்ளிக்கிழமை வருகிறது. இந்தாண்டு நவம்பர் 25ஆம் தேதி.

பிளடெல்பியாவில் அந்தக்காலத்தில் ரக்பி கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். அந்த ஆட்டத்தைக் காண்பதற்காக சுத்துபட்டு நகரங்களில் ஏராளமானவர்கள் வந்து ரக்பி விளையாட்டைப் பார்த்து ரசிப்பார்கள். அங்கேயே தங்கியிருந்து மறுநாள் கையிலிருக்கும் பணத்தில் இஷ்டத்துக்கு ஷாப்பிங் செய்வார்கள். அப்போது அவர்கள் செய்யும் அலப்பறைகளைத் தாங்க முடியாமல்தான் அந்த நாளை கருப்பு வெள்ளிக்கிழமை என்று போலீஸார் அழைக்கத் தொடங்கினர்.

ஆனால் இந்த வழக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட உள்ளூர் வியாபாரிகள் கருப்பு வெள்ளிக்கிழமையில் வாடிக்கையாளர்களுக்கு தாராளமான தள்ளுபடியை வழங்கத் தொடங்கினர். இதனால் விற்பனையும் அதிகரித்தது. இப்படி ஆரம்பித்ததுதான் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்! 1961ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பிளாக் ஃப்ரைடே என வியாபாரிகள் ஒன்று சேர்ந்து நாமகரணம் செய்வித்தனர்.

அமெரிக்காவில் மட்டுமே இருந்த இந்த வியாபார உத்தி இப்போது உலகளாவிய நிகழ்வாகி விட்டது.

அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அமேசான் போன்ற நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பான நாட்கள் என்பதால் அதற்காக புதுத் துணிமணிகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் என்று வாங்கிக் குவிக்கின்றனர்.

மற்றபடி பிளாக் ஃப்ரைடே அன்று அமெரிக்கர்கள் மற்றும் சில விஷயங்களைச் செய்கின்றனர். அன்றைய தினம் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் எங்காவது வனாந்திரப் பகுதிக்குச் சென்று முகாமிட்டு மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய அன்புக்கு நிறைந்த உறவினர்களைச் சென்று பார்த்து பரிசுப் பொருட்களையும் தருகின்றனர். குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கித் தந்து அவர்களைக் குஷிப்படுத்துகின்றனர். ஒரு புதிய புத்தகத்தை வாங்கி அன்றைக்குள் படித்து முடிக்கின்றனர்.

வாகனங்களை எடுத்துக் கொண்டு தொலைதூரம் பயணித்து சுற்றுலா தலங்களுக்குச் செல்கின்றனர். இதன்மூலம் குடும்பத்தாருடன் நல்லுறவு மேம்படுகிறது.

இப்படி பிளாக் ஃப்ரைடேவுக்கு மாறுபட்ட நல்லபக்கமும் இருக்கிறது.

IPL_Entry_Point