Zero Balance Account: ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு என்றால் என்ன? என்னென்ன நிபந்தனைகள்?
Zero Balance Account:வங்கியில் பலதரப்பட்ட சேமிப்பு கணக்குகள் உள்ளன. சேமிப்பு கணக்கை துவக்கும் போது வங்கி அதிகாரிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) இவ்வளவு கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.

வங்கியில் பலதரப்பட்ட சேமிப்பு கணக்குகள் உள்ளன. சேமிப்பு கணக்கை துவக்கும் போது வங்கி அதிகாரிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) இவ்வளவு கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அங்ஙணம் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கணக்கில் வைத்திருக்காதவர்களுக்கு வங்கி தரப்பில் அபராதம் வசூலிக்கப்படும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவு ?
குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கியை பொருத்தும் வங்கி அமைந்துள்ள இடத்தை பொருத்தும் மாறுபடும். உதாரணமாக ஒரு வங்கி மெட்ரோ (Metro) /அர்பன் (urban) /செமி அர்பன் (semi-urban) / ரூரல் (Rural) என இருப்பிடத்தைக் கொண்டு கிளைகள் வகுக்கப்பட்டிருக்கும். அக்கிளைகளில் துவக்கப்படும் கணக்குகளுக்கு இவ்வளவு இருப்பு தொகை குறைந்தபட்சம் கடைப்பிடித்தாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும். பொதுவாக நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளுக்கு தொகை அதிகமாகவும் கிராமப்புற கிளைகளுக்கு சற்று குறைவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். இதில் காசோலை (செக்) கணக்கு என்றால் ஒரு தொகையும் காசோலை அல்லாத கணக்கு என்றால் ஒரு தொகையும் நிர்ணயிக்கப்படுகின்றன. இப்படி பல காரணிகள் இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவை நிர்ணயிக்கின்றன.
ஜீரோ வங்கிக் கணக்குகள் :
அதே போல், குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கடைபிடிக்க அவசியமில்லாத ஜீரோ பேலன்ஸ் (Zero Balance) வங்கி கணக்குகளும் பல உள்ளன. நாம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து மாத சம்பளம் வாங்க கூடியவராக இருப்பவரானால், அச்சம்பளம் ஏறும் வங்கி கணக்கை நாம் சேலரி அக்கவுண்ட் (Salary account) ஆக மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு சேலரி அக்கவுண்டாக வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு எந்தவித இருப்புத் தொகையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், அவ்வாறாக உள்ள கணக்குகளுக்கு வங்கிகள் சர்வீஸ் சார்ஜஸ் விதிப்பதிலும் பல சலுகைகள் வழங்குகின்றன. உதாரணமாக, ஏடிஎம்-மில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சார்ஜஸ் வசூலிப்பதிலும் முழு விலக்கு அளிக்கின்றன. அதேபோல பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் வைக்கப்படுகின்றன.
மாத சம்பளம் வாங்காத நபர்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்கு துவக்குவது எப்படி ?
மாத சம்பளம் வாங்காத நபர்களும் ஜீரோ பேலன்ஸ் கணக்கை எளிதில் துவக்கலாம். 2014 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'அனைவருக்கும் வங்கிக் கணக்கு' திட்டத்தின் கீழ் 'பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா' (PMJDY - Pradhan Mantri Jan dhan Yojana) வகை கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அனைவருக்கும் வங்கி கணக்குகள் சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் கைரேகை வைத்து ஆதார் எண் மூலம் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு கடைக்கோடி மக்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்கும் பட்சத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் உள்ளது. இதற்கு வங்கிகளில் இருந்து நியமனம் செய்யப்படும் வணிக வங்கி தொடர்பாளர்களின் பங்கும் அளப்பரியது. BSBDA கணக்கு தான் பெயர் மாற்றப்பட்டு தற்போது PMJDY என்று அறியப்படுகிறது.
PMJDY கணக்கினை துவக்க எந்த நிபந்தனையும் வங்கிகள் விதிப்பதில்லை. தங்களுக்கு ஒரு வங்கியில் முன்னரே இதர சேமிப்பு கணக்கு இருக்கும் பட்சத்தில் அங்கு ஜீரோ வங்கி கணக்கு துவக்க முடியாது என்பது மட்டுமே ஒரே நிபந்தனையாகும். இந்த கணக்கிற்கு கொடுக்கப்படும் ஏடிஎம் கார்டும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை பிடிக்கப்படும் ஏடிஎம் நிர்வகிப்பு சார்ஜஸும் (AMC -Annual maintenance charge) இதில் கிடையாது. மேலும் 2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடும் இலவசமாக அளிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் மத்திய அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியும் PMJDY கணக்கு வைத்திருப்பவர்களுக்கே அளிக்கப்பட்டன. PMJDY ஏடிஎம் கார்டு மூலம் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து வகை மக்களுக்கும் வங்கி சேவை கொண்டு செல்ல இத்திட்டம் பயன் புரிகிறது என்று கூறுவதில் எந்த ஐயமுமில்லை.
வங்கிகள் விதிக்கும் சர்வீஸ் சார்ஜஸ் குறித்து நாம் அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக காண்போம்.

டாபிக்ஸ்