KYC Updation in Banks: கே.ஒய்.சி புதுப்பித்தல் என்றால் என்ன ? வங்கிகள் இது குறித்து சொல்வதென்ன ?
KYC Updation in Banks: KYC ஆவணங்கள் கொடுத்து துவக்கப்பட்ட கணக்கிற்கும் சிறிது ஆண்டுகள் கழித்து வங்கி தரப்பிடமிருந்து KYC யை புதுப்பித்துக் கொள்ளும்படி அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன. KYC புதுப்பித்தல் தொடர்பான ஆண்டு கெடு குறித்தும் கே.ஒய்.சி ஆவணங்கள் குறித்தும் இங்கு காண்போம்.

பொதுவாக நாம் ஒரு சேமிப்பு கணக்கை துவக்கும் போது, அடையாளச் சான்றையும் இருப்பிடத்திற்கான சான்றையும் வங்கிகள் நம்மிடமிருந்து வாங்குவது கட்டாயம். அந்த அடையாள அட்டைகளில் வங்கிகள் சரிபார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் மற்றும் முகவரியைக் கொண்டே கணக்கு துவங்கப்பட்டு கொடுக்கப்படும். அதைத்தான் வங்கி வார்த்தைகளில் KYC (Know Your customer) என்பார்கள்.
KYC ஆவணங்கள் கொடுத்து துவக்கப்பட்ட கணக்கிற்கும் சிறிது ஆண்டுகள் கழித்து வங்கி தரப்பிடமிருந்து KYC யை புதுப்பித்துக் கொள்ளும்படி அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன. "நாங்க முன்னாடியே அக்கவுண்ட் ஓபன் பண்ணும் போதே எல்லாமே குடுத்தாச்சே ! திரும்ப ஏன் கேக்குறீங்க ?"என்று வாடிக்கையாளர் தரப்பிடமிருந்தும் வாக்குவாதங்கள் எழுகின்றன. KYC புதுப்பித்தல் தொடர்பான ஆண்டு கெடு குறித்தும் கே.ஒய்.சி ஆவணங்கள் குறித்தும் இங்கு காண்போம்.
KYC ஆவணங்கள் :
ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நாம் வங்கிக் கணக்கை துவக்கிக் கொள்ளலாம். அதை வங்கி வார்த்தைகளில் OVD (Officially Valid documents) என்பார்கள். RBI கூறும் OVD ஆவணங்கள் எது என்று பின்வருமாறு -
1. பாஸ்போர்ட்
2. டிரைவிங் லைசன்ஸ்
3. வாக்காளர் அடையாள அட்டை
4. ஆதார் கார்டு
5. NREGA வேலை அட்டை
6. National population Registry அடையாள அட்டை.
பெரும்பாலும் தற்போது உள்ள வங்கிகள் அனைத்தும் e-KYC எனும் நம் விரல் ரேகையை கொண்டு கணக்கு துவக்குவதால் ஆதார் கார்டை கட்டாயமாக கேட்கின்றன. பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக கருதப்படுவதில்லை. பான் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் வங்கிகள் கொடுக்கும் Form 60 படிவத்தை நிரப்ப வேண்டும். இதைக் கொண்டுதான் தனிநபர் வங்கி சேமிப்புக் கணக்கு துவக்கப்படுகிறது.
கணக்கு தொடங்கிய சில சில காலங்கள் கழித்து நம் கணக்கில் பெயர் அல்லது முகவரி மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் வங்கியை தொடர்பு கொண்டு அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பித்து நம் பாஸ்புக்கை புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இது வாடிக்கையாளரே முன்வந்து செய்யும் KYC புதுப்பித்தலாகும். ஆனால் வங்கிகளும் வாடிக்கையாளருக்கு ஏற்ப கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கின்றன.
Risk categories in Banks :
வங்கி கணக்குகள் தொடங்கிய பிறகு வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளை வங்கிகள் தொடர்ந்து கண்காணிக்கும். கணக்கில் உள்வரும் (அ) வெளி செல்லும் பணங்கள் ஏதேனும் குற்ற செயல்களுக்கு பயன்படுகின்றனவா என்பதை ஆராய்வதில் வங்கிகள் கண்டிப்பாக இருக்கின்றன. அப்படி வாடிக்கையாளரின் இருப்பிடம், தொழில் & பரிவர்த்தனை கொண்டு ரிஸ்க் (Risk) வகுக்கப்படுகின்றன.
வாடிக்கையாளரை மூன்றாகப் பிரித்து ரிஸ்க்கள் வகுக்கப்படுகின்றன.
1. Low Risk customers
2. Medium Risk customers
3. High Risk customers
இதில் Low ரிஸ்க் வகுப்பில் உள்ள வாடிக்கையாளர்கள் 10 வருடங்களுக்கு ஒரு முறை KYC புதுப்பித்தல் வேண்டும். Medium ரிஸ்க் வகுப்பில் உள்ள வாடிக்கையாளர்கள் 8 வருடங்களுக்கு ஒரு முறையும் High ரிஸ்க் வகுப்பில் உள்ள வாடிக்கையாளர்கள் 2 வருடங்களுக்கு ஒரு முறையும் KYC புதுப்பித்தாக வேண்டும்.
இந்த காரணத்தினாலே வங்கிகள் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தவுடன் நம்மை தொடர்பு கொண்டு KYC ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு நம்மை மீண்டும் மீண்டும் அழைக்கின்றன. நாமும் நமது வங்கியை தொடர்பு கொண்டு நாம் எந்த ரிஸ்க் வகுப்பில் உள்ளோம் என்பதை அறிந்து கொள்வோம்.
வங்கிகள் நம்மை நேரில் அழைத்தே KYC யை புதுப்பிக்கின்றன. ஒருபோதும் வங்கிகள் மொபைலில் தொடர்பு கொண்டு எந்த OTP யும் கேட்காது என்பதை நாம் அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டாபிக்ஸ்