Ayodhya Ram Temple: 'அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை'-கர்நாடக துணை முதல்வர்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று கூறிய அவர், இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கும் அழைப்பு வரவில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று கூறிய அவர், இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வர் சித்தராமையாவுக்கோ அல்லது எனக்கும் எந்த அழைப்பும் வரவில்லை. எங்கள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு வந்ததாக கேள்விப்பட்டேன். எங்களுக்கு அழைப்பு வந்தால், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா அல்லது புறக்கணிப்பதா என்பதை கட்சி முடிவு செய்யும். நானும் ஒரு ராம பக்தன். நான் ஒரு இந்து, நான் ராமபிரானை வணங்குகிறேன். நான் அனுமனின் பக்தன். இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இது போன்ற விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது . எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றால், நாங்கள் இங்கிருந்து பிரார்த்தனை செய்வோம்" என்று அவர் கூறினார்.
பீகார் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் அழைப்பிதழைப் பெற்றனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராமர் சிலை நிறுவும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி கலந்து கொள்கிறார். கோயிலின் கட்டுமானத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ஜனவரி 22 விழாவிற்கு 3,000 வி.வி.ஐ.பி.க்கள் உட்பட 7,000 பேருக்கு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோர் அழைப்பாளர்களாக உள்ளனர்.