Wayanad: நிலச்சரிவு:தப்பிய பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையும் அவரது சகோதரனும்;காட்டு யானை பாதுகாத்த பாட்டியும் பேத்தியும்
Wayanad: நிலச்சரிவு:தப்பிய பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையும் அவரது சகோதரனும்;காட்டு யானை பாதுகாத்த பாட்டியும் பேத்தியும் குறித்த கதை பலரை அதிசயிக்க வைத்தது.
Wayanad: கேரள மாநிலம், வயநாட்டில் ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட கொடிய நிலச்சரிவில் இருந்து ஒரு நம்பிக்கை கீற்றான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிறந்து 40 நாள்கள் ஆன பச்சிளங்குழந்தையும் அவரின் ஆறு வயது சகோதரரும் தங்கள் வீட்டை அழித்த பேரழிவில் இருந்து தப்பியிருப்பதாக ஒன் மனோரமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தன் பிள்ளைகளைக் காப்பாற்ற தாய் செய்த பணி:
உயிர் தப்பிய இருவரின் பெயர் அனாரா மற்றும் முஹம்மது ஹயான் என்பதாகும். அதே நேரத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். குழந்தை அனாராவை காப்பாற்றுவதற்காக அவர்களின் தாய் தன்சீரா அருகிலுள்ள வீட்டின் மொட்டை மாடியில் தங்கியிருக்கிறார்.
வெள்ள நீரில் வழுக்கி விழுந்தபோது, சம்பவத்தில் காயமடைந்த தன் பச்சிளங்குழந்தையை தன்சீரா இறுகப்பிடித்துக் கொண்டார். ஆறு வயதான ஹயான் அவர்களிடமிருந்து 100 மீட்டர் தொலைவில் பொங்கி வரும் நீரால் தூக்கிச் செல்லப்பட்டார். நல்வாய்ப்பாக, கிணற்றின் அருகே இருந்த ஒரு கம்பியில் தொங்கிய அவரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர்.
மீட்புப்பணிகளுக்குப் பின், தாய் தன்சீரா தனது இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், தன்சீராவின் தாய் ஆமினா மற்றும் பாட்டி பதும்மாவின் அதிர்ச்சியூட்டும் உயிர் இழப்பு அவரது குடும்பத்தைப் பாதித்தது.
யானையால் காப்பாற்றப்பட்ட பாட்டியும் பேத்தியும்:
முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் மலையாள தேயிலைத் தோட்டத்தில் 18 ஆண்டுகளாக தேநீர் பறிக்கும் சுஜாதா, தங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பியதை விவரித்தார், "ஜூலை 30 திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், நான் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. தண்ணீர் எங்கள் வீட்டிற்குள் வந்தது. எங்கள் வீட்டின் மேற்கூரை எங்கள் மீது இடிந்து விழுந்தது. என் மகள் பலத்த காயமடைந்தாள். இடிந்து விழுந்த சுவரில் இருந்த சில செங்கற்களை அகற்றிவிட்டு வெளியே வந்தேன்.
இடிபாடுகளிலிருந்து பேத்தி அழும் சத்தம் கேட்டது, மிகுந்த சிரமத்துடன் அவளை வெளியே இழுத்தேன். குடும்பத்தின் மற்றவர்களும் தங்களை விடுவித்துக் கொண்டு, பெருக்கெடுத்து ஓடும் நீரில் நடந்து, இறுதியில் அருகிலுள்ள ஒரு குன்றில் ஏறினர்.
‘’யானை எங்களை காத்து நின்றது; கண் கலங்கியது'':
அது கடுமையான இருட்டாக இருந்தது, எங்களுக்கு அரை மீட்டர் தூரத்தில் ஒரு காட்டு யானை நின்று கொண்டிருந்தது. அதுவும் பயந்ததுபோல் இருந்தது. நான் யானையிடம் ஒரு வேண்டுகோளை முணுமுணுத்தேன். நாங்கள் ஒரு பேரழிவிலிருந்து தப்பித்தோம். இரவு தூங்க அனுமதிக்கவும். யாராவது எங்களை காப்பாற்றட்டும் என்று கேட்டுக்கொண்டேன்" என்று சுஜாதா சுட்டிக்காட்டினார்.
அவர்களின் நிலையை உணர்ந்த யானை அவர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் அசையாமல் நின்றது. இருவரும் பாக்கு மரத்தைப் பற்றிக்கொண்டு தூங்கினர்.
"நாங்கள் யானையின் கால்களுக்கு மிக நெருக்கமாக இருந்தோம். ஆனால், அது எங்கள் இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டது போல் தோன்றியது. நாங்கள் காலை 6 மணி வரை அங்கேயே இருந்தோம். யானைகளும் காலையில் நாங்கள் சிலரால் மீட்கப்படும் வரை அங்கேயே நின்றது. பொழுது விடிந்தபோது அதன் கண்கள் கலங்குவதை என்னால் காண முடிந்தது," என்று சுஜாதா நினைவுகூர்ந்தார்.
வயநாட்டில் இதுவரை எத்தனைபேர் உயிரிழப்பு?
ஜூலை 29 முதல் 30 வரை, பெய்த பலத்த மழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. 24 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 308 பேர் வரை உயிரிழந்தனர்.
2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு கேரள மாநிலத்தைப் பாதித்த மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு இதுவாகும். அதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அரபிக்கடலின் வெப்பமயமாதல், மலையைக் குடைதல் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் மரங்களை அழிக்கும் நடவடிக்கை ஆகியவற்றால் இப்பகுதியில் இதுபோன்ற கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவுகளை அடுத்து, இந்திய ஆயுதப்படைகள், தேசிய பேரிடர் மறுமொழிப் படை, மாநில பேரிடர் மறுமொழிப் படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை இடிபாடுகளை அகற்றுதல், பாலங்கள் கட்டுதல் மற்றும் மக்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் சமூக ஆதரவை வழங்க ஒரு மனநல பேரிடர் மேலாண்மைக் குழுவும் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்