Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதை

Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதை

Marimuthu M HT Tamil
Jan 18, 2025 06:59 AM IST

Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதையை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.

Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதை
Veerappan: மானசீக குரு மலையூர் மம்பட்டியான்.. ராஜ்குமார் கடத்தல்.. காவிரி நீருக்காக வைத்த கோரிக்கை.. வீரப்பனின் கதை

குறிப்பாக, வீரப்பனும் அவனது ஆட்களும் 25 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் காடுகளில் உள்ளூர் பழங்குடியினரின் ஆதரவுடன் வாழ்ந்து அரணாக இருந்தனர்.

இறுதியாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் 2004ஆம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் தேதி, தமிழகத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார், வீரப்பன். அவருடன் அவரது சகாக்கள் மூன்று பேரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்தவர் தான், விஜயகுமார் ஐபிஎஸ்.

யார் இந்த வீரப்பன்?:

தற்போதைய கர்நாடகத்தில் கொள்ளேகலா அருகிலுள்ள கோபிநத்தம்(பழைய கோவை மாவட்டம்) என்னும் ஊரில் ஜனவரி 18, 1952ஆம் ஆண்டு ஒரு தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர், வீரப்பன். இவரது தந்தையின் பெயர் கூசு. முனிசாமி கவுண்டர் - தாயின் பெயர் புலித்தாயம்மாள் என்பது ஆகும். வீரப்பன் முதலில் தனது மாமா சால்வை கவுண்டர்(அ) செவி கவுண்டர் எனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் மூலம், தனது வாழ்வையும் பணியையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார். வீரப்பனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்து இருந்தது. முதலில் சந்தனமரங்களை வெட்டி சந்தனக்கட்டைகளை கடத்தியும், யானைகளை வேட்டையாடி அதன் தந்தத்தை விற்கும் பணியிலும் ஈடுபட்டார்.

10 வயதில் முதன்முறையாக யானை வேட்டை:

வீரப்பன் 1962ஆம் ஆண்டு, கோபிநத்தத்தில் தனது 10 வயதில் முதல்முறையாக யானையை சுட்டுக்கொன்று வேட்டையாடியுள்ளார். அப்போது அதைத்தடுக்க முயன்ற மூன்று வனத்துறை அதிகாரிகளை, அவரது குழுவினர் கொன்றுள்ளனர். இவரால் 184 பேர் வரை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 97 பேர் காவல் மற்றும் வனத்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வீரப்பன், 900 யானைகளை தந்தத்திற்காக கொன்றதாக அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்துள்ளது.

மானசீக குரு மலையூர் மம்பட்டியான்:

வீரப்பன் மலையூர் மம்பட்டியான் என்னும் ஜெகஜால வித்தைக்கார கொள்ளைக்காரனின் செயல்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார். இதில் கொள்ளைக்குழுக்களுக்கு இடையே நடந்த பிரச்னையில் மலையூர் மம்பட்டியான் கொலையுண்டார். தான் தலையெடுத்து வரும்போது மலையூர் மம்பட்டியானைக் கொன்றவரின் உடன்பிறந்த சகோதரனைக் கொன்றதே, வீரப்பன் தனது இளமைக்காலத்தில் செய்த மிகப்பெரும் கொலைச்சம்பவமாகப் பார்க்கப்பட்டது.

பாலார் குண்டுவெடிப்பினை அரங்கேற்றிய வீரப்பன்:

1992ஆம் ஆண்டு வீரப்பனைப் பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல் துறையினர், சிறப்பு அதிரடிப்படையினை உருவாக்கின. அதன்பின், கேரளாவிலும் தேடுதல் படை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அருகே காவல்துறையினருக்கு துப்பு கொடுக்கும் பண்டாரியை வீரப்பன் கொன்றார். அதனைத் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்க 41 காவல் மற்றும் வனத்துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையறிந்த வீரப்பன், 22 காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பயணித்த பாதையில் கண்ணிவெடிகளை வைத்தார். இதையறியாது பயணித்த இரு குழுக்கள், கர்நாடகாவின் பாலாறு என்னுமிடத்தில் நடந்த கண்ணிவெடி, குண்டுவெடிப்பில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இந்நிகழ்வில் 22 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தல்:

வீரப்பன் செய்த சம்பவங்களிலேயே பலரையும் புருவத்தை உயர்த்த வைத்த சம்பவம், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமாரை, 30 ஜூலை 2000ஆம் ஆண்டு கடத்தியது தான் எனலாம்.

என்ன தான் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், ராஜ்குமார் பிறந்து வளர்ந்தது, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகிலுள்ள கஜனூர் என்னும் கிராமமாகும். ஒவ்வொரு மாதமும் சொந்த ஊருக்கு ராஜ்குமார் வந்து செல்வதை அறிந்த வீரப்பன், அவரை தெளிவாகத் திட்டமிட்டு கடத்தினார். இதனால் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வன்முறை வெடித்தது.

அவரை மீட்க வேண்டும் என அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை நேரில் வந்து சந்தித்தார். அதன்பின் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்த நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டார். பின் பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 108 நாட்கள் முடிந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.

காவிரியை முதன்மையாக்கி வீரப்பன் வைத்த கோரிக்கைகள்:

காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்க கர்நாடக அரசு ஆவன செய்யவேண்டும், தமிழை கர்நாடக மாநிலத்தில் 2ஆவது அலுவல் மொழியாக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்(தமிழ் தேசிய மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சார்ந்தவர்கள்) எனப் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்திக் கொலை:

அதேபோல், 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் நாகப்பாவை, கர்நாடகாவின் சாமராஜநகர், காமகெரேவில் உள்ள அவரது கிராமத்திற்குச் சென்று கடத்தினார்,வீரப்பன். ஆனால் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் நாகப்பா சடலமாக மீட்கப்பட்டார். அவரைக் கொன்றது,வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் தான்.

குற்றச்சாட்டு:

இந்நிலையில் சிறப்பு அதிரடிப் படைத் தலைவராக இருந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) விஜயகுமார், வீரப்பன் கும்பலுக்கு விஷம் கொடுக்க சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு 7 லட்சம் ரூபாய் கொடுத்ததாக 2006ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உணர்வாளர் வீரப்பன்:

வீரப்பன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவரிடம் தமிழ் உணர்வு ஓங்கி இருந்தது. 36 ஆண்டுகளாக காவல் துறையினருக்குப் போக்கு காட்டினார் என்றால், அது உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெறாமல் சாத்தியமே இல்லை என்பதே நிதர்சனம்.

2004, அக்டோபர் 18ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டபோது பலர் கொண்டாடினாலும் அவரால் நன்மைகள் பெற்றவருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். வரலாறு வெற்றி அடைந்த வீரனையோ, போரிட்டு தோற்ற வீரனையோ நினைவில் வைத்துக்கொள்ளும். வேடிக்கை பார்ப்பவனை நினைவில் வைத்துக்கொள்ளாது. வீரப்பன் அரசு இயந்திரங்கள் முன் சண்டை செய்து தோற்று மக்கள் மனதை வென்ற வீரன்!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.