DGCA: விமான பயணத்தில் ஒழுங்கீன செயல்கள்-கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளா?
DGCA: "ஒருவேளை பயணிகள் யாரேனும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களை சமாளிக்க தற்போதுள்ள விதிகளே போதுமானதாகும்."

விமான பயணத்தில் ஒழுங்கீன செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; தற்போதைய விதிகளே போதுமானதாகும் என்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக (DGCA) தலைவர் அருண் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
விமானங்களில் பயணிகளின் ஒழுங்கீன நடத்தை சம்பவங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்பு போல் அல்லாமல் இப்போது விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு விதிகள் உரிய முறையில் பின்பற்றப்படாமல் இருந்ததன் காரணமாக சில சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.
ஒருவேளை பயணிகள் யாரேனும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களை சமாளிக்க தற்போதுள்ள விதிகளே போதுமானதாகும்.
விமானங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளது.
விமானத்தில் (விமானங்கள்) ஒழுங்கு இருக்க வேண்டும். விமானத்தில் பயணிக்கும் அனைவரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
நாட்டில் சராசரியாக 4.5 லட்சம் உள்நாட்டு விமானப் பயணிகளும், 1 லட்சம் சர்வதேச விமானப் பயணிகளும் உள்ளனர். பயணிகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியா சிறந்த பாதுகாப்புத் தரங்களைக் கொண்டுள்ளது என்று அருண் குமார் தெரிவித்தார்.
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவில் இரண்டு முறை பயணிகள் நடத்தை தொடர்பான சம்பவங்கள் அரங்கேறின. இதுதொடர்பாக அந்நிறுவனத்திற்கு டிஜிசிஏ ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
ஜனவரி 20 அன்று டிஜிசிஏ, ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது. நவம்பரில் பெண் பயணி மீது ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நியூயார்க்-டெல்லி விமானத்தின் பைலட்டின் உரிமத்தையும் டிஜிசிஏ ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.

டாபிக்ஸ்