‘தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மும்மொழிகளை பயிற்றுவிக்கின்றன': மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சொன்ன டேட்டா!
1.4 மில்லியன் இந்திய பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளை வழங்குகின்றன, 28.3% இரண்டு மொழிகளை வழங்குகின்றன மற்றும் 10.1% ஒரு மொழியை மட்டுமே வழங்குகின்றன

1.4 மில்லியன் இந்திய பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளையும், 28.3% இரண்டு மொழிகளையும், 10.1% ஒரு மொழியை மட்டுமே வழங்குகின்றன என்று கல்வி அமைச்சகம் மார்ச் 24 மக்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மட்டுமே மூன்று மொழிகளை வழங்குகின்றன என்ற தகவலும் கிடைத்தது.
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகளில், "14, லட்சத்து 71 ஆயிரத்து 891 இந்தியப் பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளை பயிற்றுவிக்கின்றன. மொத்தமுள்ள, 24 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 828 மாணவர்களில் 74.7% பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது 28.3% பேருக்கு அந்த பள்ளிகளில் இரண்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் 16.8% மாணவர்கள் இந்த இருமொழிகளைப் படிக்கின்றனர். மேலும் 10.1% பேர் ஒரு மொழியை மட்டுமே பயில்கின்றனர். மொத்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் 8.5% மாணவர்கள் இவ்வகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மும்மொழிக்கொள்கையைப் பயிற்றுவிக்கும் மாநிலங்களின் ஏற்ற இறக்கமான தரவுகள்:
குறிப்பாக, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 0.3% பள்ளிகளும், நாகாலாந்தில் 2.5% பள்ளிகளும், தமிழ்நாட்டில் 3.2% பள்ளிகள் மட்டுமே மூன்று மொழிகளைப் பயிற்றுவிக்கின்றன.
குஜராத்தில் 97.6 சதவீதமும், யூனியன் பிரதேசமான சண்டிகரில் 97.4 சதவீதமும், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ 96.8 சதவீத பள்ளிகள் மூன்று மொழிகளைப் பயிற்றுவிக்கின்றன.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.பி.யான கனிமொழி கருணாநிதி கேட்ட மும்மொழி கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இணை கல்வி அமைச்சர் ஜெயந்த், சமீபத்திய கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (UDISE) தரவுகள் 2023-24 அறிக்கையையும் சேர்ந்து பகிர்ந்து கொண்டார்.
தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 மற்றும் அதன் மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களில் நடந்து வரும் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் மொழிகள் குறித்த விவாதத்திற்கு மத்தியில் அமைச்சரின் பதில் வந்துள்ளது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை, ஒவ்வொரு பள்ளி மாணவரும் குறைந்தது மூன்று மொழிகளைப் படிப்பதை கட்டாயமாக்குகிறது.
அதன்படி, மாநில மொழி, பிராந்திய மொழி என மூன்று மொழிகளைத் தேர்வு செய்ய தேசிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையின்கீழ் இந்தி அல்லது சமஸ்கிருதம் திணிக்கப்படுமா என்ற கவலையை எழுப்பி, மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் உள்ள மாநிலக் கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
தமிழ்நாட்டில் தரவுகளின்படி மும்மொழியைப் படிக்கும் விழுக்காடு:
தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 58,722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 37% ஒரு மொழியை பயிற்றுவிக்கின்றன. 59% இரண்டு மொழிகளை சொல்லித்தருகின்றன. 3.2% மட்டுமே மூன்று மொழிகளை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 50 பள்ளி மாணவர்களில், 31.4% பேர் ஒரு மொழியை வழங்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். 57.8% இரு மொழியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். 10.8% பேர் மூன்று மொழிகளை வழங்கும் பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் குறித்த எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை கல்வி அமைச்சர் சவுத்ரி, தமிழகத்தில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 24 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அப்பள்ளிகளில், தமிழகத்தில் தற்போது 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர் எனக் கூறினார்.

தொடர்புடையை செய்திகள்