75 Rupees Coin: புதிய நாடாளுமன்றம் திறப்பு; 75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு!
New Parliament Building: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு, 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையிலும், 75 ரூபாய் சிறப்பு நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாணயம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் குடியரசுத் தலைவர் இல்லாமல் பிரதமர் எப்படி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கலாம் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசின் இந்த முடிவை ஏற்காத காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 கட்சிகள், நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு, 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றம் திறக்கவுள்ள மே 28 ஆம் தேதி இந்த நாணயத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
தலைநகர் டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, 'சென்டிரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய கட்டிடப் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் மே 28, ஞாயிறன்று நண்பகலில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.