Union Budget 2024: விரைவில் மத்திய பட்ஜெட்! அல்வா கிண்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்! பட்ஜெட் ரகசியம் தெரியுமா?
Union Budget 2024: பட்ஜெட் உரையை தயாரிப்பதற்கான பணிக்காகவும், அதன் ரகசியம் காக்கவும் நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள அடித்தளத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவது வழக்கம். மக்களவையில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை முடித்த பிறகுதான் அதிகாரிகள் அந்த கட்டடத்தில் இருந்து வெளியே வருகிறார்கள்.
அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து பட்ஜெட் வரைவு உரை தயார் செய்த பிறகு அதனை அச்சகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு ‘அல்வா’ தயாரிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
மத்திய பட்ஜெட் 2024-25 தயாரிப்பதற்கான இறுதி கட்டத்தை குறிக்கும் பாரம்பரிய 'அல்வா தயாரிக்கும்' விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். லோக்சபாவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, ஆவணம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ’அல்வா’ தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
டெல்லியில் நிதியமைச்சகம் உள்ள நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் நிதியமைச்சகம் பதிவிட்டுள்ள பதிவில், "மத்திய பட்ஜெட் 2024-25-க்கான பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று புதுதில்லியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் வழக்கமான அல்வா விழாவுடன் தொடங்கியது," என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்வா தயாரிக்கும் நிகழ்வு என்றால் என்ன?
பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த விழா ஒரு பிரிவு உபசார விழாவை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பட்ஜெட்டில் உள்ள தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ரகசியம் காக்கப்படுகின்றது.
பட்ஜெட் உரையை தயாரிப்பதற்கான பணிக்காகவும், அதன் ரகசியம் காக்கவும் நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள அடித்தளத்தில் நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவது வழக்கம்.
மக்களவையில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை முடித்த பிறகுதான் அதிகாரிகள் அந்த கட்டடத்தில் இருந்து வெளியே வருகிறார்கள். நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் 1980 முதல் 2020 வரை 40 ஆண்டுகளாக பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சகம் உள்ளது, அதன் பிறகு பட்ஜெட் டிஜிட்டல் ஆனது. இதன் காரணமாக, லாக்-இன் காலம் இரண்டு வாரங்கள் வரை நீடித்த முந்தைய காலத்திலிருந்து வெறும் ஐந்து நாட்களாகக் குறைந்துள்ளது.
7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சராக, நிர்மலா சீதாராமன் இதுவரை 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்வின் சாதனையை எட்டிய இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் சீதாராமன், ஜூலை 2019ஆம் ஆண்டு முதல் ஐந்து முழுமையான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து உள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர்களான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் இதற்கு முன்னர் ஐந்து தொடர்ச்சியான பட்ஜெட்களை தாக்கல் செய்து இருந்தனர்.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, ரயில்வே மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பிற முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போது ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை உயர்த்தப்படும் என ஊகிக்கப்படுகிறது.
வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான முக்கியக் கொள்கை வருமான வரிச் சட்டத்தின் 24(b) பிரிவின் கீழ் வரிச் சலுகைகளாக இருக்கலாம், வரவிருக்கும் பட்ஜெட்டில் அதற்கு இடமளிக்கலாம்.
புதிய பட்ஜெட், சமையல் எரிவாயு மீதான நேரடி பயன் பரிமாற்றம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் மூலம் பெண்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு, தள்ளுபடி செய்யப்பட்ட சுகாதார சேவைகள் வழங்கப்படுவதன் அடிப்படையில், சுகாதாரப் பாதுகாப்புக்கும் இதேபோன்ற முயற்சி எதிர்பார்க்கப்படுகிறது.
சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கான வருமான வரி விலக்கு வரம்பை தற்போதைய ரூ.10,000-இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.