உக்ரைன் மீது 479 டிரோன்களை ஏவி மிகப்பெரிய இரவு நேர டிரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய இரவு நேர டிரோன் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மீது 479 டிரோன்களை ஏவி மிகப்பெரிய இரவு நேர டிரோன் தாக்குதலை நடத்தியது. நேரடி அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில், கிரெம்ளின் தனது கோடை கால தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து 20 ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு உக்ரைன் பகுதிகளை இந்த தாக்குதல் இலக்கு வைத்தது. உக்ரைன் விமானப்படை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 277 டிரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை நடுவானில் அழித்ததாகக் கூறியது,
மேலும் 10 டிரோன்கள் அல்லது ஏவுகணைகள் மட்டுமே இலக்கை தாக்கியதாகக் கூறியது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூற்றுக்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தனது போரை மீண்டும் தொடங்கியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சில பகுதிகளில் "நிலைமை மிகவும் கடினமாக உள்ளது" என்று கூறினார்.