HBD Birsa Munda: பழங்குடியின மக்களின் குரலாக ஒலித்த பிர்சா முண்டா பிறந்த தினம் இன்று..யார் இவர்?
பழங்குடி மக்களால் 'மண்ணின் தந்தை' என்று அழைக்கப்படும் பிர்சா முண்டாவின் பிறந்த தினம் இன்று (நவ.15). இந்நாளில் அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ..!
மனித சமூகம் எவ்வளவு தான் வளர்ச்சி பாதையில் சென்றாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் என்பது இன்னும் பெரிதாக முன்னேற்றம் அடையவில்லை. குறிப்பாக, பழங்குடி இனமக்களின் வாழ்வாதாரம் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்து வரும் சவால்களும் இன்னல்களும் ஏராளம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே போராடியவர் தான் பிர்சா முண்டா. அநீதிக்கு எதிரான பழங்குடி மக்கள் உரிமைப் போராட்டத்தின் முதல் குரலாகவும் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார். வெறும் 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பிர்சா முண்டா பழங்குடி மக்களால் 'மண்ணின் தந்தை' என்று அழைக்கப்பட்டார்.
யார் இந்த பிர்சா முண்டா?
கடந்த 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளில் பீகார் மாநிலத்தில் அன்றைய பெங்கால் பிரசிடென்சியில் இருந்த உலிஹதி என்ற கிராமத்தில் பிறந்தவர் பிர்சா முண்டா. சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா. 'பிர்சா' என்றால் வியாழன், 'முண்டா' என்றால் ஆதிவாசி என்று அர்த்தம். அப்போதைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடினார் பிர்சா முண்டா.
இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் "காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் பிரிட்டிஷ் அரசுக்கே சொந்தம்" எனும் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. பிரிட்டிஷ் அரசால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை கண்டு வெகுண்டெழுந்தார் பிர்சா முண்டா. அநீதிக்கு எதிரான பழங்குடி இன மக்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் குரல் பிர்சா முண்டாவுடையதாக இருந்தது. 1895-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். இதுவே பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமாகும்.
பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது "ஒரு குரலை விட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று திரட்டிப் போராடினார்.
1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர். இந்த தாக்குதலில் பிரிட்டிஷாரின் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நிலப்பிரபுக்களின் வீடுகள் உள்ளிட்டவை பழங்குடி மக்களால் சூறையாடப்பட்டன. ஏராளமான காவலர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் பிர்சா முண்டாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. உடனே அவர் தலைமறைவானார். இவரைத் தேடும் முயற்சியில் 400 பழங்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர் தேடுதல் வேட்டையில் 1900ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி காட்டில் பிர்சா தனது தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிர்ஷா முண்டா காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1900 ஜூன் 9ம் தேதி உயிரிழந்தார். சரியாக பிர்ஷா முண்டா மறைந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு சோட்டா நாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908) கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது என்பதே வரலாறு. பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக போராடி மறைந்த பிர்சா முண்டாவின் பிறந்த தினம் இன்று (நவ.15). பிர்சா முண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்வோம்..!
டாபிக்ஸ்