Tamil News  /  Nation And-world  /  Today Is Rudolf Christian Karl Diesel's Birthday
 ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்
ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (@amshaafrica)

HBD Diesel: தினமும் டீசல் விலை பார்ப்பவரா நீங்கள்? இன்றுதான் டீசல் பிறந்தநாள்!

18 March 2023, 6:10 ISTPandeeswari Gurusamy
18 March 2023, 6:10 IST

டீசல் என்ஜினை கண்டறிந்த ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் பிறந்த தினம் இன்று 

இன்று நாம் அவசர அவசரமாக நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் போது நம்மை விட அவசரமாக செல்லும் வாகனங்களை பார்க்கும் போது மலைப்பாக கடப்பதுண்டு. ஆனால் அவை கடந்து செல்லும் போது அதற்கு காரணமானவர் பற்றி என்றைக்காவது நினைத்து பார்த்ததுண்டா. அவர் தான் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல். டீசல் இன்ஜினை கண்டு பிடித்த  இவர் பிரான்ஸில் தியோடர் டீசல், எலிஸ் டீசல் தம்பதிக்கு1858ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி மகனாக பிறந்தார். இவரது தந்தை புத்தக பைண்டிங் மற்றும் தோல் பொருள் உற்பத்தி தொழில்கள் செய்தவர். பெற்றோர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். ஆனால் ப்ரெஞ்ச்-பிரஷ்யா போரின் போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் குடியேறினர். ஆனால் டீசல் மற்றும் படிப்பை தொடர்வதற்காக பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். சிறுவயதிலிருந்தே இயந்திரங்களுடன் அதிக நேரம் செலவிடுவதில் டீசல் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். படிப்பிலும் அவர் படு கெட்டி.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மீண்டும் ஜெர்மனிக்குச் சென்றார். மேலும் ஆக்ஸ்பர்கில் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில் நுட்ப பல்கலையில் சேர்ந்தார். ஆனால் உடல் நலம் குன்றியதால் 1879ல் அவரால் தனது படிப்பை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில் சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியல் நுணுக்கங்களை பயில தொடங்கினார்.

இந்நிலையில் முனீச்சில் நகரில் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டே வின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் பணியில் இணைந்தார். இதையடுத்து நவீன முறையில் குளிர் சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அவரது கடின உழைப்பின் காரணமாக அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநர் ஆனார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர். அப்போது இருந்தே இன்ஜின்கள் குறித்தும் டீசல் ஆராய தொடங்கினார். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த இவர் வித விதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.

ஒரு கட்டத்தில் நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். கார்னாட் சுழற்சி அடிப்படையிலான இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின்என அழைக்கப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார். அதுமட்டும் இல்லாமல் பல நாடுகளிலும் டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார்.

முதலில் டீசல் இன்ஜினில் சில வகையான தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்பட்டு ஒரு எண்ணெய் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் என்பதை தெரியவந்தது. அந்த எண்ணெய்க்கும் ‘டீசல்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.

டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு, இன்றைய நவீன தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளம் என்றால் அது மிகையல்ல.

1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் தன் 55 வயதில் மறைந்தார்.

இன்று நம் எல்லோருடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு போக்குவரத்து எளிமையானது ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. இன்று நம் வாழ்க்கையை இலகுவாக்க ஏதோ ஒரு வகையில் ஆரம்ப புள்ளியாக இருக்கும் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் பிறந்த நாளில் அவரது நினைவுகளை பகிர்வதில் ஹெச் டி தமிழ் மகிழ்ச்சியடைகிறது.

டாபிக்ஸ்