உலகின் மாசுபட்ட நகரம்.. டெல்லிக்கு இரண்டாவது இடம்.. முதலிடத்தில் மற்றொரு இந்திய நகரம்! டாப் 30 இடங்கள் லிஸ்ட்
இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரம் என்று கருதப்படும் டெல்லி, இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ள நிலையில், டெல்லியை முந்தியுள்ளது மற்றொரு இந்திய நகரம். இந்த பட்டியலில் கஜகஸ்தானின் கரகண்டா மூன்றாவது, பஞ்சாபின் முல்லாண்பூர் நான்காவது மற்றும் பாகிஸ்தானின் லாகூர் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
சுவிஸ் குழுவான IQAir இன் வருடாந்திர மாசுபாடு அறிக்கையின்படி, இந்தியாவின் வடகிழக்கு பகுதியான மேகாலயாவில் உள்ள பைர்னிஹாட், 2024ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. டெல்லி இந்த இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் தலைநகரான டெல்லி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக மாசுபாடு கொண்ட நகரம்
மைய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பைர்னிஹாட்டை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகர்ப்புறப் பகுதியாக அறிவித்துள்ளது. இங்குள்ள காற்று தர குறியீடு (AQI) 302 ஆக உள்ளது, இது "மிகவும் மோசம்" என்கிற பிரிவில் உள்ளது.
மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் கானரட் சாங்க்மா தலைமையில் கூடிய மேகாலய அமைச்சரவை, மாநிலம் முழுவதும் மாசு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில், மே 1 அன்று ஒரு வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை அங்கீகரித்தது. அதன்படி சுமார் 13 ஆயிரம் வாகனங்கள் சாலைகளில் இருந்து அகற்றப்பட உள்ளன. இதில் 5 ஆயிரம் அரசு வாகனங்கள் மற்றும் 8 ஆயிரம் தனியார் வாகனங்கள் என்று அரசு செய்தித் தொடர்பாளர் பால் லிங்க்டோ கூறினார்.