Saif Ali Khan stabbing: நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர்.. தப்பிச் சென்றவரை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தது எப்படி?
Saif Ali Khan stabbing case: துர்க்கில் உள்ள ஆர்.பி.எஃப் பொறுப்பாளர் சஞ்சய் சின்ஹா கூறுகையில், மும்பை போலீசார் சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் டவர் லொக்கேஷனை பகிர்ந்து கொண்டனர்.

Saif Ali Khan stabbing case: சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சந்தேக நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது அவர் கைது செய்யப்பட்டார். பிலாஸ்பூரில் உள்ள ஆர்.பி.எஃப் எஸ்.இ.சி.ஆர் மண்டலத்தின் ஐ.ஜி முனாவர் குர்ஷீத், ரயிலில் பயணித்த சந்தேக நபர் குறித்து மும்பை போலீசாரிடமிருந்து தகவல் பெற்றார். ஆர்.பி.எஃப் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ததாக அவர் கூறினார். அவர் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
ரயிலில் தப்பிச் சென்றார்
"நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதாக மும்பை காவல்துறையினரிடமிருந்து ஆர்.பி.எஃப் ராய்ப்பூர் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. 32 முதல் 33 வயதுடைய ஆகாஷ் கனோஜியா என்ற சந்தேக நபர் துர்க் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார், அவர்கள் மேலதிக விசாரணையை மேற்கொள்வார்கள்" என்று குர்ஷீத் ஏ.என்.ஐ.யிடம் தெரிவித்தார்.
சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் டவர் லொக்கேஷனை மும்பை போலீசார் பகிர்ந்து கொண்டதாக துர்க்கில் உள்ள ஆர்.பி.எஃப் பொறுப்பாளர் சஞ்சய் சின்ஹா தெரிவித்தார். பின்னர் அவர்கள் தகவலைப் பயன்படுத்தி ரயிலின் பொது பெட்டியில் அவரைக் கண்டுபிடித்தனர்.
