‘Disease X’ : உலகை உலுக்கப்போகும் அடுத்த தொற்று! ஐநாவின் அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன? மருத்துவர்கள் விளக்கம்
UN Report : சில நாட்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயாராக வேண்டும் என்றும், அது கொரோனா தொற்றைவிட ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது அதுகுறித்த விவரங்கள் வெளியாகி மக்களை மேலும் பீதியடையச்செய்துள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் நோய்கள் பற்றி வெளியிட்ட ஒரு அறிக்கை அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.
பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பல லட்சம் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். அதன் பின்னர் வைரஸ் பரவலின் தீவிரம் ஓரளவு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பிவிட்டனர்.
வைரஸ் பெருந்தொற்று உலகளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து, மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், கொரோனா பெருந்தொற்று அவசர நிலையை விலக்கி கொள்வதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இதனால், உலக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறோம் என்று எண்ணியிருக்கும் இந்தவேளையில்தான், உலக சுகாதார நிறுவனம் அடுத்த அச்சுறுத்தலை கொடுக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயராக இருக்க வேண்டும் எனவும்இ அது கொரோனா தொற்றை விட ஆபத்தானதாகவும் இருக்கும் எனவும் எச்சரித்திருந்தார்.
உலக சுகாதார அமைப்பு இவ்வாறு கூறிய பின் அதன் இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நோய்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் என தேர்வு செய்யப்பட்டு வெளியான இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த நோய்களில் எபோலா, சார்ஸ், ஜிகா வைரஸ் ஆகியவை இடம் பெற்று இருந்தன.
இந்த நோய்கள் பற்றி உலக மக்கள் பரவலாக அறிந்து இருந்தாலும் இறுதியாக பட்டியலில் 'Disease X' என குறிப்பிடபட்டுள்ளது சற்று அச்சம் ஏற்படுத்துவமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைபின் இணையதளத்தில், தொடர்ச்சியான பெருந்தொற்றுக்கள் pathogen (நோய்க்கிருமிகள்) மூலம் ஏற்படக்கூடும் . இது ஒரு புதுவகையான வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை என்பதாகக்கூட இருக்கலாம். சிகிச்சை முறைகள் எதுவும் அறிந்திடாத ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற பட்டியலை வெளியிட்டது. அதற்கு அடுத்த ஆண்டே கொரோனா, உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது கவனிக்க வேண்டியது.
உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கூறிய பட்டியலில், மார்பர்க் வைரஸ், கிரிமீன் - காங்கோ ஹெமோராஜிக் காய்ச்சல், லஸ்சா காய்ச்சல், நிபா மற்றும் ஹெனிபவிரல் நோய்கள் உள்ளிட்டவையும் பட்டியலிட்டப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பதன் மூலம் காடுகளின் அழிப்பால்,அதிலுள்ள உயிரினங்கள் குறைந்தும், அழிந்தும் வருகின்றன. எனவே அவற்றில் உள்ள கிருமிகள் வாழ வழி தேடி மனித உடல்களில் தஞ்சம் புகும்போது இதுபோன்ற புதிய, புதிய கிருமிகள் புதிய தொற்று நோய்களுக்கு காரணமாகின்றன என மருத்துவ வல்லுனர் புகழேந்தி தெரிவித்தார். மேலும் புவி வெப்பமடைதலும் இதுபோன்ற புதிய நோய்த்தொற்றுக்கு காரணம் என்று அவர் கூறுகிறார்.