தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  The Inspiring Journey Of Sarojini Naidu: Poet, Feminist, And Freedom Fighter

Sarojini Naidu: ’கவிஞர் TO சுதந்திர போராளி’ சரோஜினி நாயுடு செய்த சம்பவங்கள்!

Kathiravan V HT Tamil
Feb 13, 2024 05:50 AM IST

காந்தியுடன் பல்வேறு போராட்ங்களில் ஈடுபட்டு, அவருடனே சிறையும் சென்ற சரோஜினி நாயுடு காந்தியால் ’மிக்கி மவுஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

கோப்புப்படம் - சரோஜினி நாயுடு
கோப்புப்படம் - சரோஜினி நாயுடு

ட்ரெண்டிங் செய்திகள்

இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த சரோஜினி நாயுடு பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ’கோல்டன் திரஷ்ஹோல்ட்’ என்ற புத்தகம் பிரபலமானது. இவரது ’இன் த பஜார்ஸ் ஆஃப் ஹைதராபாத்’ என்ற கவிதை தொகுப்பு பள்ளி பாடங்களில் இடம்பெற்றுள்ளது. 

இவரது கவிதைகளுக்காக இவர் ’கவிக்குயில்’ என்றும் அழைக்கப்பட்டார். அந்த கவிதையில் ஹைதராபாத்தின் சந்தைகள் எப்படி இருக்கும் என்றும், முத்துக்களுக்கு புகழ்பெற்ற ஹைதராபாத்தின் முத்துக்கள் குவிந்த கடைவீதியின் அழகை அருமையாக வர்ணித்து இருப்பார். 

இந்திய சுதந்திர போராட்டத்தில் சரோஜினி நாயுடுவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  சென்னை பல்கலைக்கழகத்தில் தனது 12வது வயதில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரிகளில் படித்தார். உருது, பாரசீகம், தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி ஆகிய மொழிகளில் நன்றாக பேசுவார். அவருக்கு பிடித்த கவிஞர் ஷெல்லி ஆவார்.

சரோஜினி நாயுடு இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது அவருக்கு காதல் மலர்ந்தது. கோவிந்தராஜீலு என்ற மருத்துவரை அவர் காதலித்து தனது 19வது வயதில் திருமணம் செய்துகொண்டார். பிற சாதியினரை திருமணம் செய்துகொள்ள மக்கள் தயங்கிய காலத்தில் அவர் சாதி மறுப்பு திருமணத்தை குடும்பத்தினரின் ஒப்புதலுடன் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என்ற 4 குழந்தைகள் பிறந்தனர். அதில் பத்மஜா பின்னாளில் மேற்குவங்கத்தின் ஆளுனரானார்.

1905ம் ஆண்டு வங்கதேசம் பிரிக்கப்பட்டதை அடுத்து அவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரையில் கலந்து கொண்டார். பின்னர் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார். இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் பல்வேறு தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. இளைஞர் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். 1925ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்.

பிரிட்டிஷ் அரசு 1919ம் ஆண்டு கொண்டு வந்த ரௌவுலட் சட்டத்திற்கு எதிராக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் சரோஜினி நாயுடு முதலில் இணைந்தார். நியுயார்க் சென்றபோது அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இந்திய இன வேற்றுமை குறித்து மிகவும் வருந்தினார். சுதந்திரம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டு காந்தியுடன் சிறை சென்றார். பின்னர் சிறையில் இருந்து திரும்பி ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திற்காக மீண்டும் கைது செய்யப்ப்பட்டார். காந்தியுடன் பல்வேறு போராட்ங்களில் ஈடுபட்டு, அவருடனே சிறையும் சென்றவர் மட்டுமல்ல காந்தியால் ’மிக்கி மவுஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், இன்றைய உத்ரபிரதேசம், அன்றைய யுனைடட் ப்ரொவின்சஸின் ஆளுநராக பதவியேற்றார். இதன் மூலம் இவர் இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் என்ற பெருமையை பெற்றார். இவர் 1949ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

WhatsApp channel

டாபிக்ஸ்