டாடாவின் தொடர் காதல் தோல்விகள்! திருமணமே வேண்டாம்! தொழிலே போதும்! சாதித்து காட்டிய டாட்டா!
ரத்தன் டாட்டாவிற்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் என்றால் அவரை அந்நாட்டின் சில அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கும். அவரிடம் பணி புரியும் தொழிலாளர்களுக்கு பிடிக்கும். அதிகபட்சம் அவரது தொழிலில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பிடிக்கும். ஆனால் ஒரு தொழில் அதிபரின் மறைவுக்கு இந்தியாவே கண்ணீர் சிந்துகிறது. இந்திய மக்களாகிய ஒவ்வொருவரும் அவரது சமூக வலைத்தளம் முதல் வாட்சப் வரை அவரின் புகைப்படத்தை வைத்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது அனைத்துக்கும் தகுதியான ஒருவர் என்றால் அது இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாட்டா தான். இவரைத் தவிர இந்த அன்புக்குத் தகுதியானவர்கள் யாரும் இல்லை.
எளிய மக்களுக்கான குறைந்த விலையிலான கார், தொடர்ந்து புதுவிதமான மோட்டார் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு ஊக்கம் என எளிய மக்களுடன் இவர் அதிகம் தொடர்பில் இருந்ததே மற்ற தொழில் அதிபர்களிடம் இருந்து இவரை தனித்துக் காட்டியது. இத்தனை பெருமைகளுக்கு சொந்தமான ரத்தன் டாட்டா நேற்று (அக்டோபர் 9) இரவு மும்பை மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
ரத்தன் டாடாவின் காதல்
ரத்தன் டாட்டாவிற்கு 86 வயதாகிறது. இவர் தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமலேயே இருந்தார். அதற்கான காரணமாக அவரது காதல் தோல்வியை கூறினார். அவரது சுவாரசியமான காதல் கதைகள் குறித்து தற்போது பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ரத்தன் டாடா அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்தில் அவரது கல்லூரி படிப்பை படித்தார். அதன் பின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழ்ந்து வந்தார். அங்கு தான் அவர் முதன் முறையாக காதலில் விழுந்தார். அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளும் நடந்தன. திடீரென அந்த சமயத்தில் அவரது பாட்டிக்கு இந்தியாவில் உடல்நிலை மோசமாக மாறியதால் அவர் இந்தியாவிற்கு திரும்பினார்.
டாடாவின் காதலி இந்தியாவிற்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில், 1962 ஆம் ஆண்டு நடந்த இந்தியா- சீனா போரின் காரணமாக அவரின் பெற்றோர் அனுமதிக்க மறுத்து விட்டனர். அந்த காதலில் இருந்து மீண்டு வர மிகவும் கடினமாக இருந்ததாக கூறியுள்ளார். இவரது காதல் கதையை சமீபத்தில் ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பேவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிமி கார்வேல் உடனான காதல்
முன்னதாக ரத்தன் டாட்டா பல ஆண்டுகளுக்கு முன் பிரபல தொகுப்பாளரும், பாலிவுட் நடிகையுமான சிமி கார்வேல்க்கு ஒரு பேட்டி அளித்து இருப்பார். அதில் பல முறை திருமணம் செய்ய முடிவு எடுத்ததாகவும், பல காரணங்களால் தடை பட்டதாகவும் தெரிவித்து இருப்பார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவுட்டில் சுறுசுறுப்பாக இருந்தபோது ரத்தன் டாடாவுடன் சிறிது காலம் டேட்டிங் செய்ததைப் பற்றி சிமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பேசியிருந்தார். அவர்கள் பிரிந்து விட்டதாகவும், ஆனால் தொடர்ந்து நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், "ரத்தனும் நானும் வெகு தூரம் திரும்பிச் செல்கிறோம். அவர் பரிபூரணமானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், அடக்கமானவர், சரியான பண்புள்ளவர். பணம் ஒருபோதும் அவரது உந்து சக்தியாக இருக்கவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பது போல் இந்தியாவில் நிம்மதியாக இல்லை'எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சிமி கார்வேல் ரத்தன் டாட்டாவிற்கு அவரது X தளத்தில் இரங்கல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ' எல்லாரும் நீங்கள் போய்விட்டீர்கள் என்கிறார்கள்.. உங்கள் இழப்பை தாங்குவது மிகவும் கடினம்..மிகவும் கடினம்.. பிரியாவிடை நண்பரே" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அரச மரியாதை
ரத்தன் டாட்டாவிற்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காதல் தோல்விகளை கடந்து திருமணமே வேண்டாம் என முடிவு எடுத்து முழுக்க தொழிலில் தன்னை ஈடுபடுத்தி அணைவருக்குமான ஒரு நபராக டாட்டா வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது அளப்பரிய ஆர்ப்பணிப்புக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
டாபிக்ஸ்