Tesla cuts prices: டெஸ்லா கார்களின் விலை திடீர் குறைப்பு: ஏன் இந்த மாற்றம்?
Tesla EV Cars: டெஸ்லா அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்களின் விலையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பிரபலமான காராக கருதப்படும் டெஸ்லா கார், வெள்ளியன்று அமெரிக்க சந்தையில் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனங்களின் விலையை குறைத்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்களின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் கணக்கீட்டின்படி, மாடல் 3 மற்றும் மாடல் Y ஆகியவற்றின் விலைக் குறைப்பு தள்ளுபடிக்கு முன் இருந்த விலைகளில் 6% முதல் 20% வரை விலை குறைப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலன் மாஸ்கின் டெஸ்லா கார்கள், உலகளாவிய சந்தையில் கடும் வரவேற்பை பெற்ற கார்கள் ஆகும். ஆளில்லாமல் இயங்கும் அதிநவீன கார்களை அறிமுகப்படுத்தியிருந்தது டெஸ்லா. இந்த கார்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதைத்தொடர்ந்து உலகின் முன்னணி பணக்கார நாடுகளிலும் டெஸ்லா பயன்படுத்துவதை ஒரு கவுரவமாக கருதி பயன்படுத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தாது, கடும் சவால்களை எதிர்கொள்ளும் என்றெல்லாம் டெஸ்லா மீது சிறப்புகள் கூறப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் புதுமை படைத்து வரும் டெஸ்லா கார்கள், அமெரிக்காவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. சந்தையில் நல்ல விற்பனையில் உள்ள தன்னுடைய கார்களை திடீரென டெஸ்லா நிறுவனம் விலை குறைக்க என்ன காரணம் என தெரியவில்லை.
இருப்பினும் திடீர் விலை குறைப்பால் கார் ப்ரியர்கள் குஷியடைந்துள்ளனர். டாலர்களில் இந்த விலை குறைப்பு டெஸ்லா விற்பனையை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ள டெஸ்லா, பிற நாடுகளிலும் அதை பின்பற்றப் போகிறதா? அல்லது அமெரிக்க சந்தையை தக்க வைக்க இந்த வியூகத்தை எடுத்திருக்கிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.