Supreme Court: ‘பெண் திருமணம் செய்தால் பணிநீக்கம் என்பது பாலின பாகுபாடு’-உச்சநீதிமன்றம் கருத்து
திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணின் வேலையை நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
"திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணின் வேலையை நீக்குவது பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று, இது அரசியலமைப்புக்கு எதிரானது" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு பணம் வழங்கப்படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியது.
வழக்கின் பின்னணி
1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையின் (எம்.என்.எஸ்) லெப்டினன்ட் செலினா ஜான், பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிப்ரவரி 14 அன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செலினா ஜான் திருமணம் செய்து கொண்டதாலும், வருடாந்திர ரகசிய அறிக்கையில் (ஏ.சி.ஆர்) குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் அவரை பணியில் இருந்து நீக்கியதாக இந்திய ராணுவம் அவருக்கு வழங்கிய பணிநீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து செலினா ஜான், லக்னோவில் உள்ள ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தை (AFT) 2016 அணுகினார். அதை விசாரித்த தீர்ப்பாயம், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில், செலினா ஜானின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது. மேலும், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ராணுவத்திற்கு உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "பிரதிவாதியான முன்னாள் லெப்டினன்ட் செலினா ஜான் திருமணம் செய்து கொண்டார் என்ற அடிப்படையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற எந்தவொரு கூற்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய விதி வெளிப்படையாக தன்னிச்சையானது, ஏனெனில் பெண் திருமணம் செய்து கொண்டதால் வேலையைவிட்டு நீக்குவது பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்றாகவே பார்க்கிறோம். இத்தகைய ஆணாதிக்க மனப்பான்மையை ஏற்றுக்கொள்வது மனித கண்ணியம், பாகுபாடு காட்டாத உரிமை மற்றும் நியாயமான நடத்தை ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அந்த அமர்வு கூறியது.
எந்தவொரு சட்டமும் அல்லது ஒழுங்குமுறையும் பாலின பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும், பெண் ஊழியர்களின் திருமணம் மற்றும் அவர்களின் குடும்ப ஈடுபாட்டை உரிமை பறிப்பதற்கான ஒரு காரணமாக கருதும் விதிகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.
செலினா ஜான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு செவிலியராக சிறிது காலம் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் AFT உத்தரவை மாற்றியமைத்து, அவருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதன் மூலம் அவரது கோரிக்கைகளுக்கு முழு மற்றும் இறுதி தீர்வை வழங்கியது.
"எட்டு வார காலத்திற்குள் பிரதிவாதிக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மேல்முறையீட்டாளர்களுக்கு (மத்திய அரசு / இராணுவம்) நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
குறிப்பிட்ட காலத்திற்குள் செலினா ஜானுக்கு இத்தொகை வழங்கப்படாவிட்டால், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை இந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
டாபிக்ஸ்