Electoral Bonds: '1 மாதமாக எதுவுமே செய்யவில்லை' தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்பிஐக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
Electoral Bonds: எஸ்பிஐ வெளியிட்ட தகவல்களை மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Court: தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்க் ஆப் (SBI) இந்தியாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 11) தள்ளுபடி செய்தது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கவில்லை என்றால் வேண்டுமென்றே உத்தரவை செயல்படுத்த மறுப்பதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எஸ்பிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 11) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பியது. "கடந்த 26 நாட்களில், நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அது குறித்து உங்கள் மனு மௌனம் சாதிக்கிறது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நன்கொடை அளிப்பவர்கள், அவர்கள் நன்கொடை அளித்த தொகை மற்றும் பெறுபவர்கள் குறித்த விவரங்களை மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஸ்பிஐ சீலிடப்பட்ட உறையைத் திறந்து, விவரங்களைத் தொகுத்து தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு மேலும் கூறியது.
முன்னதாக, எஸ்பிஐ வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, வங்கிக்கு அதன் கிளைகளில் கோர் பேங்கிங் அமைப்பில் தகவல்கள் வைக்கப்பட்டுள்ளதால் விவரங்களை ஒன்றிணைக்கவும் அவற்றை பொருத்தவும் அதிக நேரம் தேவை என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்த பணியை முடிக்க எஸ்பிஐக்கு குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும் என்று அவர் மேலும் கூறினார். ஆனால், இந்த வாதத்தை ஏற்காத உச்ச நீதிமன்றம் இந்தப் பணியை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியைக் கேட்கவில்லை. நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்று கூறியது. எனவே தகவல்களை ஒருங்கிணைக்க கால அவகாசம் கேட்பது சரியல்ல என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் காலக்கெடுவை நீட்டிக்க எஸ்பிஐ கோரியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக அரசு தனது "சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளுக்கு" வங்கியை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறது என்று கூறியிருந்தார்.
"தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை மறைக்க பிரதமர் மோடி அரசு நம் நாட்டின் மிகப்பெரிய வங்கியை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறது. லோக்சபா தேர்தலுக்கு பின், அதை செய்ய வேண்டும் என,பா.ஜ.க விரும்புகிறது. இந்த மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, ஜூன் 30 க்குள் தரவைப் பகிர்ந்து கொள்ள எஸ்பிஐ விரும்புகிறது" என்று கார்கே கூறியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்