Tamil News  /  Nation And-world  /  Supreme Court Dismisses Plea Seeking Inauguration Of New Parliament Building By President
புதிய நாடளுமன்ற கட்டிடம் வழக்கு தள்ளுபடி
புதிய நாடளுமன்ற கட்டிடம் வழக்கு தள்ளுபடி

New Parliament Building: புதிய நாடாளுமன்றம் குறித்த வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

26 May 2023, 14:24 ISTKarthikeyan S
26 May 2023, 14:24 IST

New Parliament Building case: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் குடியரசுத் தலைவர் இல்லாமல் பிரதமர் எப்படி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கலாம் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவை ஏற்காத காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 கட்சிகள், நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த விவகாரம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதற்கிடையில், வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மே 25) பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (மே 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா ஆகியோர் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இது போன்ற விசயங்களைப் பார்ப்பது இந்த நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் நீங்கள் ஏன் இதுபோன்ற வழக்குகளைத் தாக்கல் செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜெய சுகின் தனது மனுவில், கடந்த 18 ஆம் தேதி மக்களவை செயலக ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்