Tamil News  /  Nation And-world  /  Sunitha Williams Today Is The Birthday Of Sunitha Williams The 2nd Woman Who Spent The Most Days In Space

Sunitha Williams : விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய 2வது பெண் சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Sep 19, 2023 05:00 AM IST

Sunitha Williams : ‘நாங்கள் நிறைய பொருட்களை சுமந்து செல்ல முடியாது. ஆனால் இந்த சிறிய பொருட்களை நான் எடுத்துச்செல்ல ஆசைப்பட்டேன். எனது வீட்டில் எங்கும் கணேசா சிலைகள் நிறைந்திருக்கும். எனவே அவர் என்னுடன் விண்வெளிக்கு வந்தார்’ என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுனிதா வில்லியம்ஸ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுனிதா வில்லியம்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய அமெரிக்க தந்தை தீபக் பாண்டியா மற்றும் ஸ்லோவின் அமெரிக்கன் தாய் பானி பாண்டியாவுக்கும் மகளாக பிறந்தவர். 1998ல் விண்வெளி வீராங்கனையாக நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்லொவீனியா இவரது தாயின் பூர்வீகம், இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் இவரது தந்தையின் பூர்வீகம். இவர் 11 வயதில் அமெரிக்காவில் குடியேறினார். விண்வெளியில் நடந்தவர்களுள் அனுபவமிக்கவர். 

இவர் 7 முறை விண்வெளியில் நடந்துள்ளார். இவர் சிறப்பு உலக சாதனை செய்துள்ளார். விண்வெளியில் அதிகம் உலாவிய பெண் என்பதுதான் அது. 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து விண்வெளியில் அதிக நேரம் நடந்த இரண்டாவது பெண் என்ற சாதனையை செய்துள்ளார். 

இருமுறை அவர் மேற்கொண்ட விண்வெளி பயணத்தில் கிட்டத்தட்ட 321 நாட்கள் தங்கி, அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெகி விட்ஸனுக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண்மணி என்ற பட்டத்தை பெற்றவர்.

1965ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி பிறந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை. சர்வதேச விண்வெளி மையத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். விண்வெளியில் நடந்த வீரர்களுள் அதிக அனுபவம் கொண்டவராக சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். இவர் 2006ம் ஆண்டு முதல்முறையாக விண்வெளி சென்றபோது சிறிய விநாயகர் சிலையையும், பகவத் கீதையின் பிரதியையும் எடுத்துச்சென்றார். அவரது தந்தை இந்தியில் எழுதிய கடிதத்தை, அவருக்காக கொஞ்சம் சமோசாக்களையும் எடுத்துச்சென்றார்.

மேரிலாண்ட் அன்னாபோலிஸில் உள்ள யு.எஸ். நேவல் அகாடமியில் நுழைந்தார். 1987ம் ஆண்டு விமான போக்குவரத்து பயிற்சியை நேவல் ஏவியேசன் பயிற்சி அகாடமியில் பெற்றார். 1989ம் ஆண்டு போர் ஹெலிகாப்டர் பயிற்சி பெற்றார். பெர்சிய வளைகுடா போருக்கான தயாரிப்பு, ஈராக்கின் குர்திஷ் பகுதிகளில் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் 1992ம் ஆண்டு மியாமி ஆன்ட்ரு புயல் நிவாரண ஹெலிகாப்டர்களில் பறந்துள்ளார்.

‘நாங்கள் நிறைய பொருட்களை சுமந்து செல்ல முடியாது. ஆனால் இந்த சிறிய பொருட்களை நான் எடுத்துச்செல்ல ஆசைப்பட்டேன். எனது வீட்டில் எங்கும் கணேசா சிலைகள் நிறைந்திருக்கும். எனவே அவர் என்னுடன் விண்வெளிக்கு வந்தார்’ என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

1993ம் ஆண்டு கப்பல்படை பயிற்சி விமான விமானியானார். பின்னர் பயிற்சி விமான பயிற்றுவிப்பாளர் ஆனார். 30 பல்வேறு விமானங்களில் 2,770 மணி நேரத்திற்கும் மேல் பறந்துள்ளார். விண்வெளி வீரர் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவர் யுஎஸ்எஸ் கப்பலில் இவர் பணிபுரிந்தார்.

1995ம் ஆண்டு மெல்பர்னில் ஃப்ளோரிடா தொழில்நுட்ப மையத்தில் எம்.எஸ் பொறியியல் மேலாண்மை படிப்பை முடித்துவிட்டு, அவர் 1998ம் ஆண்டு விண்வெளி வீரர் பயிற்சியில் சேர்ந்தார். இவர் மாஸ்கோ சென்று, ரோபாடிக்ஸ் மற்றும் மற்ற சர்வதேச விண்வெளி மைய (ஐஎஸ்எஸ்) தொழில்நுட்பங்களை ரஷ்யன் ஃபெடரல் ஸ்பேஸ் ஏஜென்சியில் பணிபுரியும்போது, ஐஎஸ்எஸ் செல்ல தயாராகிக்கொண்டிருந்த குழுவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

சுனிதா தற்போது விண்வெளி ஓடத்தில் பயணம் செய்யும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். அவரது பிறந்த நாளில் அவர் இன்புற்று இருக்க ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்