Mother Teresa: தொழுநோயாளிகளை அன்பினால் ஆட்கொண்டு சேவை புரிந்த அன்னை தெரசாவின் பிறந்தநாள்
Mother Teresa:தொழுநோயாளிகளை அன்பினால் ஆட்கொண்டு சேவை புரிந்த அன்னை தெரசாவின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரையினைக் காண்போம்.
Mother Teresa: ‘அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்’ என்ற வரியை உதிர்த்தவர், அன்னை தெரசா, யாருமே நெருங்கி சென்று சிகிச்சையளிக்க தயங்கிய தொழுநோயாளிகளிடம் தயங்காமல் சென்று, தன்னால் இயன்ற சேவைகளை செய்து புகழ் பெற்றவர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப்புகழ் பெற்றவர் அன்னை தெரசா.
அன்னை தெரசா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்பியே எனும் நகரில் பிறந்தார். நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ இவரின் பெற்றோர் ஆவர். இவருக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர்.
அன்னை தெரசா பிறந்த அடுத்த நாள் ஆகஸ்ட் 27ம் தேதி அவருக்கு கிறிஸ்தவ சம்பிரதாயப்படி பெயர் சூட்டபட்டது. எனவே அன்னை தெரசா ஆகஸ்ட் 27ம் தேதியையே தன்னுடைய பிறந்த நாளாக கருதினார். அன்னை தெரசாவிற்கு 8 வயதாக இருந்தபோது, அவரது தந்தை காலமானார். தனது 18 வயது வரை தாயார் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரியுடன் ஸ்கோப்பியே நகரில் வாழ்ந்து வந்தார்.
சிறுவயதிலேயே தோன்றிய சேவை மனப்பான்மை
கிறிஸ்தவ மத நம்பிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு கொண்டு வளர்ந்த அன்னை தெரசா, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகளின் சேவைகள் குறித்து கேள்விப்பட்டு, அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள பெரும் ஆர்வம் கொண்டார்.
தனது 12 வயதில், வாழ்க்கையையே கிறிஸ்தவ மதத்திற்காகவும், பிறருக்கு சேவை புரிவதற்காகவும் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என விரும்பி தன்னுடைய 18வது வயதில் அயர்லாந்து நாட்டில் இருந்த ‘சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ’ என்ற கிறிஸ்தவ மத அமைப்பில் கன்னியாஸ்திரியாக தன்னை இணைத்துக்கொண்டார்.
1929ம் ஆண்டு இந்தியா வந்து டார்ஜிலிங்கில் கிறிஸ்தவ மதப் பணிகளில் ஈடுபட்டார். கொல்கத்தாவின் சேரிகளில் இருந்த வறுமையைக்கண்டு ஏழைகளுக்கு சேவை செய்ய செவிலியர் படிப்பை பயின்றார். பின்னர் பள்ளி துவங்கி சேவை, நோயாளிகளுக்கு சேவை, தொழு நோயாளிகளுக்கு மருத்துவ சேவை என உலகம் முழுவதும் வறுமை, போர், பஞ்சம் என சேவையை தனது வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு செயல்படுத்தினார். இவர் உருவாக்கிய மிஷனரி ஆஃப் சாரிட்டீஸ் என்ற அமைப்பு உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இடையில் தன் பெயரை ’அன்னை தெரசா’ என்று மாற்றிக்கொண்டார்.
உயரிய விருதுகள் பலவென்ற அன்னை தெரசா:
உலகிலேயே மனித குலத்திற்கு சேவைகள் செய்ததற்காக அதிகளவு விருது பெற்ற நபராக அன்னை தெரசா இருந்தார். 1962ம் ஆண்டு அன்னை தெரசாவின் சேவைகளை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு அவரின் சேவைகளை பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சேசே அமைப்பு அவருக்கு விருது வழங்கியது. 1969ம் ஆண்டு சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது.
1971ம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மதப்பிரிவின் தலைமை குருவான போப் பன்னிரெண்டாம் ஜான்பாலிடம் அமைதி விருது பெற்றார், அன்னை தெரசா. இதுபோல் உலகளவில் அங்கீகாரம் பெற்றார்.
1997ம் ஆண்டு மார்ச் மாதம் தான் ஏற்படுத்திய கிறிஸ்தவ சேவை அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து விலகினார். அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ம் தேதி அன்னை தெரசா தனது 87வது வயதில் மேற்குவங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அன்னை தெரசா இறந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 2016ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி ரோம் நகரில் உள்ள வாட்டிகன் சதுக்கத்தில், பல லட்சக்கணக்கான கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் முன்னிலையில் அன்னை தெரசாவிற்கு அப்போதைய போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.
ஏழைகளின் தாய் அன்னை தெரசாவின் பிறந்த நாளில் அவரை வணங்குவதில் மகிழ்கிறது தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ்!
டாபிக்ஸ்