HBD Bal Thackeray: மும்பையை ஆட்டி படைத்த பால் தாக்கரே வளர்ந்தது எப்படி?
மகாராஷ்டிர அரசியலில் புயலைக் கிளப்பிய சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 23).
kaதன் வாழ்நாளில் இறுதிவரை மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள், இந்துத்துவா என்ற கொள்ளையில் இருந்து பின்வாங்காமல் வாழ்ந்து மறைந்த சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த தினம் இன்று. இந்நாளில் அவரும் அவரது கட்சியும் மகாராஷ்டிர அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது இந்த கட்டுரையில் பார்ப்போம்.
தோற்றம்
மகாராஷ்டிர மக்களிடையே இந்துத்துவாக் கொள்கையை தீவிரமாக வேரூன்றியவர் சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே. 1926, ஜனவரி 23 ஆம் தேதி மகராஷ்டிர மாநிலம் புணேவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பால் கிஷோர் தாக்கரே. மராத்தி சந்திரசேனிய காயஸ்த பிரபு என்ற முற்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். தந்தையின் ஆழமான அரசியல் கருத்துகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்ட பால் தாக்கரே, 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' இதழில் கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த இதழுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகி, மராட்டிய மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன் மும்பையில் 1960-ல் ‘மர்மிக்’ என்ற கேளிச்சித்திர வார இதழை தொடங்கி நடத்தினார்.
கார்ட்டூன்கள் வெளியீடு
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரத்தை குஜராத்திகள், பீகாரிகள் மற்றும் மதராசிகள் என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியர்கள் தங்கள் கையில் வைத்திருந்தார்கள். சொந்த மண்ணில் மராட்டிய மைந்தர்கள் புறக்கணிக்கப்படுவதாக தனது இதழில் பால் தாக்கரே தொடர்ந்து கார்ட்டூன்களை வெளியிட்டு வந்தார். இதற்கு மராட்டியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தகட்டத்துக்கு தயார் ஆனார் பால் தாக்கரே.
சிவசேனை தோற்றம்
மராட்டிய மக்களின் வாழ்வும், வளமும் பறிக்கப்படுவதாக தொடர்ந்து பிரசாரம் செய்து வந்த பால் தாக்கரே, 1966 ஆம் ஆண்டு ஜூன் 19-ல் சிவசேனை என்கிற கட்சியை தொடங்கினார். மராட்டிய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக்கொண்ட இக்கட்சி, குஜராத்தியர்கள், தென்னிந்தியர்களை, மார்வாடிகளை வந்தேறிகள் என்று கூறி மகராஷ்டிராவில் இருந்து அப்புறப்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக பால் தாக்கரே கையில் எடுத்த ஆயுதம் 'நாம் மராட்டியர்கள்..மண்ணின் மைந்தர்கள்' என்ற கொள்கை.
சாம்னா பத்திரிகை
மகாராஷ்டிரா மராட்டியர்களுகே என்ற கோஷத்துடன் பிராந்தியவாதத்தையும் கூடுதலாக தேசியவாதத்தையும் கையில் எடுத்திருந்த சிவசேனை பின்னாளில் இந்துத்துவத்தையும் சேர்த்துக் கொண்டது. சிவசேனையின் கொள்கைகளை பரப்ப சாம்னா என்ற தினப்பத்திரிகையை பால்தாக்ரே தொடங்கினார். இன்றும் இதுவே சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக இருந்து வருகிறது.
தீவிரமான இந்துத்துவா கொள்கை
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நாடு முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்தன. இதன் விளைவாக 1993ல் மும்பையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதையே சந்தர்ப்பமாக வைத்து, முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பால் தாக்கரே பேசினார். இந்தியாவை இந்துக்களின் ராஜ்ஜியம் என்று அழைக்கத் தொடங்குமாறு வற்புறுத்திய பால் தாக்கரே, இந்து மதம் மட்டுமே இந்தியாவில் மதிக்கப்பட வேண்டும் என்று சூளுரைத்தார்.
தேர்தல் அரசியல்
இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுத்து சிவசேனை கட்சியை வளர்த்த பால் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து பெரும் வெற்றி கண்டார். 1995 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனை 73 இடங்களையும், பாஜக 65 தொகுதிகளையும் வென்று கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனையின் தலைவராக இருந்தாலும் பால் தாக்கரே முதல்வராகவில்லை, அவர் ஆட்சியதிகாரத்துக்கு வெளியில் இருந்து செல்வாக்கு செலுத்துபவராகவே தொடர்ந்தார்.
தன் வாழ்நாளில் இறுதிவரை மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள், இந்துத்துவா என்ற கொள்ளையில் இருந்து பின்வாங்காமல் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்த தினம் இன்று..!
டாபிக்ஸ்