Stock Analysis: ஷேர் வாங்கலாம் வாங்க-1: 'PE Ratio-வை பார்த்து பணத்தை பெருக்குவது எப்படி?’
Stock Analysis: அதிகமாக டிமேட் கணக்குகள் தொடங்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. சரியான அறிவு மற்றும் உத்தியுடன் அணுகினால் பங்குச் சந்தையில் பணம் அள்ளலாம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக டிமேட் கணக்குகள் தொடங்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. சரியான அறிவு மற்றும் உத்தியுடன் அணுகினால் பங்குச் சந்தையில் பணம் அள்ளலாம். பங்குகளை பகுப்பாய்வு செய்வது எப்படி என்பதை இந்த தொடர் விரிவாக விளக்கி பங்கு வர்த்தகத்தில் ஜொலிக்க நம்பிக்கையை அளிக்கும்.
EPS பற்றி அறிவோம்!
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள எல்லா நிறுவனங்களும் லாபம் பார்க்கவே இயங்கி கொண்டு இருக்கின்றது. இந்த நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தால் முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்ற விகிதத்தை ’EPS’ என குறிப்பிடுகின்றனர். ஒரு நிறுவனத்தின் நிகர லாபத்தை அந்த நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை உடன் வகுக்கும் போது கிடைக்கும் எண் ஆனது EPS என அழைக்கப்படுகின்றது.
உதாரணமாக ’ABC’ என்ற நிறுவனத்திடம் 10 ஆயிரம் பங்குகள் உள்ளது. அந்நிறுவனம் கடந்த காலாண்டில் ஒரு லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து உள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒரு லட்சம் ரூபாய் லாபத்தை 10 ஆயிரம் பங்குகளை கொண்டு பிரித்தால் அந்நிறுவனத்தின் EPS மதிப்பு-10 என்று வரும்.
ஒரு நிறுவனத்தின் EPS மதிப்பு ஆனது நல்ல நிலையில் இருந்தால், அந்நிறுவனம் நிறைய லாபம் சம்பாதிக்கிறது என்று பொருள்படும். இதனால் நிறைய லாபத்தை பங்குதாரர்களுக்கு தருகிறது என்பதுதான் இதன் பொருள் ஆகும்.
பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் காலாண்டு வாரியாக தங்கள் லாப நஷ்ட கணக்குகளை வெளியிடுவார்கள். ஆனால் அதற்கு முன்பே பங்குச்சந்தை ஆய்வாளர்கள் அந்நிறுவனம் எவ்வளவு EPS வரும் என்பதை கணித்துவிடுவார்கள். கணிக்கப்பட்ட அளவை விட EPS மதிப்பு குறைவாக இருந்தால், நிறுவனத்தின் பங்கு விலை குறைய வாய்ப்புகள் உண்டு. அதிக EPS இருந்தால் அந்நிறுவனத்தின் பங்கு அதிக விலைக்கு செல்லும்.
போக்கு காட்டும் EPS!
ஆனால் EPS - ஐ கொண்டு பங்கின் மதிப்பை ஆய்வு செய்வதில் சில பிரச்னைகளும் உள்ளன. சில நிறுவனங்கள் சந்தையில் உள்ள பங்குகளை நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஒரு நிறுவனத்தில் 10 ஆயிரம் பங்குகள் உள்ளது எனில், அதில் 5 ஆயிரம் பங்குகளை அந்நிறுவனமே திரும்ப பெற்றுக் கொண்டால் வெறும் 5 ஆயிரம் பங்குகள் மட்டுமே சந்தையில் உள்ளது. இந்த ஒரு லட்சம் லாபத்தை 5 ஆயிரம் பங்குகளை கொண்டு டிவைட் செய்தால் EPS மதிப்பு 20 ரூபாய் என்று வரும். இதனால் EPS மதிப்பு அதிகமாக இருக்கும். எனவே EPS மதிப்பை மட்டும் கொண்டு ஒரு பங்கு, நல்ல பங்குதானா என்பதை தீர்மானித்துவிட முடியாது.
பூதக்கண்ணாடியாக உதவும் PE Ratio!
10 ஆயிரம் பங்குகளை கொண்ட நிறுவனம் ஒரு லட்சம் லாபத்தை சம்பாதித்து உள்ளது. அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை சந்தையில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். இதனை 2 வகையாக புரிந்து கொள்ள முடியும். ’இன்றைக்கு 10 ரூபாய் லாபம் தரும் பங்கு எதிர்காலத்தில் 1000 ரூபாய் லாபம் கொடுக்கும் என்ற நம்பிக்கை’ என்று பொருள் கொள்ளலாம்.
இந்த விகிதத்தை 'PE Ratio' என்று சொல்கின்றனர். ஒரு பங்கின் விலையை EPS-ஐ கொண்டு டிவைட் செய்தால் வரும் எண்ணே 'PE Ratio' என அழைக்கப்படுகின்றது. 1000/10 = 100 என்ற அடிப்படையில் PE Ratio மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதாவது வரும் லாபத்திற்கு 100 மடங்கு கூடுதல் விலை கொடுத்து இந்த பங்கு வாங்கு வாங்கப்படுகின்றது என்பது பொருள் ஆகும்.
PE Ratio - வை கொண்டு ஒரு பங்கு அதிக விலைக்கு மதிப்பிடப்பட்டு உள்ளதா? அல்லது குறைந்த விலைக்கு மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். நிறுவனம் செயல்படும் துறைகளை சார்ந்து உள்ள இதர நிறுவனங்களின் PE Ratio உடன் இதனை ஒப்பீடு செய்ய வேண்டும். இது ’Industry PE’ என்று அழைக்கப்படுகின்றது. Industry PE மதிப்பை ஒப்பீடு செய்யும் போது PE Ratio மதிப்பு குறைவாக இருந்தால் அந்நிறுவனம் சந்தை விலையை விட குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பங்கு, அதனை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று பொருள் ஆகும்.
பொறுப்புத் துறப்பு
இந்த தொடரில் வழங்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது புரோக்கிங் நிறுவனங்களின் கருத்துக்கள், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கருத்துக்கள் அல்ல. சந்தை நிலைமைகள் விரைவாக மாறக்கூடும் என்பதாலும், தனிப்பட்ட சூழ்நிலைகள் மாறுபடலாம் என்பதாலும், முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும், தனிப்பட்ட ஆபத்து சகிப்புத்தன்மையைக் கருத்தில் கொள்ளவும், முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
