Sabarimala: சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா?-மத்திய அரசு பதில்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sabarimala: சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா?-மத்திய அரசு பதில்

Sabarimala: சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா?-மத்திய அரசு பதில்

Manigandan K T HT Tamil
Published Feb 14, 2023 07:22 AM IST

Sabarimala: சபரிமலை அருகிலேயே விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலன்பெற முடியும்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்து கூறியதாவது:

கேரள மாநிலம், சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கேரள அரசின் கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது திட்டத்தை சமர்ப்பித்தது.

அதுகுறித்து விமான நிலையங்கள் ஆணையம், விமான போக்குவரத்து இயக்குநரகம், ராணுவ அமைச்சகம், கேரள தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த அமைப்புகள் தெரிவித்த கருத்துகளின்படி, தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள தொழில் வளர்ச்சி கழகத்திடம் கோரினோம். அந்த அறிக்கை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் நடந்த விமான நிலையங்களுக்கான வழிகாட்டு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, நிலம் இருப்பு, வில்லங்கத்தை அகற்றுதல் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கேரள தொழில் வளர்ச்சி கழகத்திடம் கேட்டோம். அந்த தகவல்களை கடந்த டிசம்பர் மாதம் அளித்தது. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம் என்று வி.கே.சிங் பதிலளித்தார்.

முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு ஆண்டுதோறும் வருகை தந்து சுவாமி ஐயப்பனை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.

கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்தான் தற்போது சபரிமலைக்கு வருபவர்கள் விமானங்களில் வந்திறங்க முடியும். இரு நகரங்களிலிருந்தும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வதற்கான பயண நேரம் அதிகம்தான்.

இதனால், சபரிமலை அருகிலேயே விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.