HBD Zakir Husain: ஜெர்மனியில் டாக்டர் பட்டம்..சிறந்த கல்வியாளர்.. முன்னாள் ஜனாதிபதி ஜாஹிர் உசேன் பிறந்தநாள் இன்று!
Dr Zakir Husain Birthday: இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான ஜாஹிர் உசேன் பிறந்த தினம் இன்று (பிப். 8). இந்நாளில் அவரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், சாத்தியமான எல்லா துறைகளிலும் இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற வெறி கொண்டவர்கள் பலர் இருந்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் டாக்டர் ஜாஹிர் உசைன். 1967 முதல் 1969 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்ததைத் தவிர, இந்தியாவின் கல்வித் துறையை உயர்த்துவதில் மிக முக்கிய பங்காற்றியவர்.
பிறப்பு
ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பிடா உசேன் வழக்கறிஞர். ஆரம்பக் கல்வியை ஹைதராபாத்தில் கற்ற பிறகு, குடும்பம் உத்தரப்பிரதேசத்துக்கு குடிபெயர்ந்தது. அதன் பிறகு அங்குள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். ஜாஹிர் உசேனுக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது தந்தை காலமானார். அடுத்த 4 ஆண்டுகளில் தாயும் இறந்தார்.
கல்வி
சுய முயற்சியால் படித்த உசேன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1926 ஆம் ஆண்டு ஜெர்மனியில், பெர்லின் நகரில் உள்ள பெடெரிக் வில்லியம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அலிகார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே காந்தியடிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். அவரது ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது.
பொறுப்புகள்
அலிகாரில் தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அலிகாரில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1920-ல் டெல்லிக்கு மாற்றப் பட்டது. ஜமியா மில்லியா இஸ்லாமியா எனப் பெயர் மாற்றப்பட்டது. 1927-ல் மூடப்படும் நிலையில் இருந்த தேசிய முஸ்லிம் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது சீரிய தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணி புரிந்தார். ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.
காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்துக்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.
அரசியல்
1956 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962-1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் 3-வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்' என்று கூறியவர்.
இறப்பு
கல்வித் துறையில் இவரது சிறந்த பங்களிப்புகளுக்காக 1954 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, அலகாபாத், அலிகார், கெய்ரோ பல்கலைக்கழகங்கள் இலக்கிய மேதை பட்டம் வழங்கின. 1963-ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றார். நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாஹிர் உசேன் 72-வது வயதில் 1969-ல் மறைந்தார்.
மறைந்த ஜாஹிர் உசேன் பிறந்த தினம் இன்று (பிப். 8). மரணம் வரையிலும் நாட்டிற்காக உழைத்த ஜாஹிர் உசேனை நினைத்து பெருமை கொள்வோம்.
டாபிக்ஸ்