Raymond:'யார் வீட்டுல பிரச்னையில்ல': துரத்திய தந்தையை மனம்மாறி வீட்டுக்கு அழைத்து வந்த ரேமண்ட் ஓனர் கவுதம் சிங்கானியா!
Raymond: கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு தன் தந்தையைத் துரத்திய ரேமண்ட் ஓனர் கவுதம் சிங்கானியா, மனம் திருந்தி மீண்டும் தனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

Raymond: ரேமண்ட் நிறுவனம் மக்களால் பல ஆண்டுகளாக விரும்பப்படும் துணி நிறுவனம் ஆகும். விஜய் பத் ஒரு சிறிய துணி நிறுவனத்தில் இருந்து ரேமண்டை உலகப்புகழ்பெற்ற பிராண்டாக மாற்றினார்.
இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாகப் பிரிவினையில், மகன் கவுதம் சிங்கானியா தனது தந்தை விஜய் பத் சிங்கானியாவிடம் இருந்து அனைத்துச் சொத்துகளையும் பெற்றுக்கொண்டு, அவரை வயதான காலத்தில் வீட்டை விட்டுவெளியில் அனுப்பிவிட்டார். இதனால் விஜய் பத் சிங்கானியா கஷ்டப்படுவதாக நிறைய ஊடகங்கள் செய்தியை வெளிப்படுத்தின.
இந்நிலையில் ரேமண்ட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைவருமான கவுதம் சிங்கானியா, தனது தந்தை விஜய் பத் சிங்கானியாவிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பின் அவரை தன் சொந்த வீட்டுக்கு அழைத்து வந்தார். தன் மனைவி நவாஸ் மோடியிடமிருந்து பிரியமுயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், கவுதம் சிங்கானியா தனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக ரேமண்ட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கவுதம் சிங்கானியா, இன்று தனது சமூக ஊடக தளமான எக்ஸ்ஸில் தனது தந்தையை வீட்டிற்கு வரவேற்றது குறித்துப் பகிர்ந்தார்.
அதில்,"இன்று என் தந்தை வீட்டில் இருப்பதிலும், அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதிலும் மகிழ்ச்சி. நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புகிறேன்"என்று கவுதம் சிங்கானியா தனது தந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு உருக்கமாக எழுதியுள்ளார்.
2015ஆம் ஆண்டில் விஜயபத் சிங்கானியா, ரேமண்ட் நிறுவனத்தின் அதிகாரங்கள் முழுவதையும் மகன் கவுதமிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் விஜய் பத் சிங்கானியா, தனது மகனின் இல்லத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார். ஒரு பிச்சைக்காரனைப்போல் வாழ்ந்தார் என ஊடகங்கள் கூறுகின்றன.
அப்போது பலரும் விஜய் பத் சிங்கானியா தனது மகனுக்கு எல்லாவற்றையும் கொடுப்பதில் ஒரு 'முட்டாள்தனமான' தவறு செய்துவிட்டதாகவும், பெற்றோர்கள் "எல்லாவற்றையும் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பு மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும்" என்றும் மக்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் சமீபத்தில் விஜய் பத் சிங்கானியா தனது மகன் கவுதம் சிங்கானியா குறித்து இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், " எனது மகனுக்குப் பிடிக்காத ஒன்றை நான் சொன்னால், அவர் என்னைத் திட்டலாம். அதைவிட்டுவிட்டு அவர் என்னை வீட்டை விட்டு துரத்தியிருக்கக் கூடாது. அதனால், என்னால் முடிந்தவரை விலகி இருக்க முயற்சிப்பேன்" என்று விஜய் பத் பிசினஸ் டுடேவுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறினார். இந்த உரையாடலில் விஜய் பத், ’’தனது மகன் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால், தன்னிடம் எஞ்சியிருக்கும் சொற்ப பணத்தில் தான் உயிர் வாழ்கிறேன்’’ என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேமண்டின் விற்பனை சமீப காலமாக கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் கவுதம் சிங்கானியா, தனது மனைவி நவாஸ் மோடியுடன் விவாகரத்துப் பேச்சுவார்த்தையில் உள்ளார்.
இதன் ஒருபகுதியாக, தனக்கு ஜீவனாம்சமாக சொத்தில் 75 விழுக்காட்டை நவாஸ் மோடி, கவுதம் சிங்கானியாவிடம் கேட்டுள்ளார். வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கவுதம் சிங்கானியா - நவாஸ் மோடி தம்பதிக்கு, நிஹாரிகா, நிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும் தனது சமீபத்திய இந்தியா டுடே பேட்டியில் விஜய் பத் சிங்கானியா, ’’மகன் கவுதம் சிங்கானியா மற்றும் மருமகள் நவாஸ் மோடி சிங்கானியா தம்பதிகள் எடுத்த விவாகரத்து முடிவில் தலையிட விரும்பவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் தனது மருமகளுக்கு ஆதரவாக நிற்பதாகவும்; தனது மகனுக்கு ஆதரவாக இருக்கமாட்டேன் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், கவுதம் சிங்கானியா, தனது தந்தை விஜய் பத் சிங்கானியா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மார்ச் 20ஆன இன்று BSE-ல் ரேமண்ட் பங்குகள் 1.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,731.80ஆக முடிந்தது.

டாபிக்ஸ்