Priyanka faces ED charges: ராபர்ட் வதேரா PMLA வழக்கில் பிரியங்கா மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
இந்த வழக்கு தொடர்பான முந்தைய குற்றப்பத்திரிகைகளில் வதேராவை Thampi-இன் நெருங்கிய உதவியாளர் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தாலும், பிரியங்காவின் பெயரை குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மற்றும் மகள் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மூலம் ஹரியானாவில் நிலம் வாங்கியதாகவும், அவர் என்ஆர்ஐ தொழிலதிபர் சி.சி.தம்பிக்கு நிலத்தை விற்றதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.
பணமோசடி
அந்நிய செலாவணி மற்றும் கருப்புப் பணச் சட்டங்களை மீறியது மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் ஆகியவற்றுக்காக பல அமைப்புகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி சம்பந்தப்பட்ட பெரிய வழக்கு இது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பிரிட்டிஷ் பிரஜையான சுமித் சத்தாவுடன் சேர்ந்து பண்டாரி குற்றச் செயல்களை மறைக்க உதவியதாக தம்பி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான முந்தைய குற்றப்பத்திரிகைகளில் ராபர்ட் வதேராவை தம்பியின் நெருங்கிய உதவியாளர் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தாலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தில் பிரியங்காவின் பெயர் குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய குற்றப்பத்திரிகையில், வதேரா மற்றும் தம்பி இருவருக்கும் சொத்துக்களை விற்ற எஸ்டேட் முகவர் எச்.எல்.பஹ்வா, ஹரியானாவில் நிலம் வாங்கியதற்கான பணத்தைப் பெற்றதாகவும், விற்பனைக்கான முழு தொகையையும் வதேரா செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. 2006 ஆம் ஆண்டில் பிரியங்காவுக்கு விவசாய நிலத்தை விற்ற பஹ்வா, 2010 ஆம் ஆண்டில் அதை அவரிடமிருந்து திரும்ப வாங்கினார்.
ராபர்ட் வதேரா மற்றும் பிரியங்கா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக பெயரிடப்படவில்லை, மேலும் தம்பிக்கும் வதேராவுக்கும் இடையிலான தொடர்பை குறிப்பிடுவதற்காக நில பரிவர்த்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையில், “இந்த வழக்கின் விசாரணையின் போது, சி.சி.தம்பிக்கும் ராபர்ட் வதேராவுக்கும் இடையே நட்புறவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனிப்பட்ட நட்புறவு மட்டுமல்லாமல், பொதுவான மற்றும் ஒத்த வணிக நலன்களும் அவர்களிடையே காணப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2020 இல் கைது செய்யப்பட்ட தம்பி, வதேராவை தனக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும் என்றும், வதேராவின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டெல்லி பயணங்களின் போது அவர்கள் பல முறை சந்தித்ததாகவும் வெளிப்படையாக அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அமிபூர் கிராமத்தில் 2005 முதல் 2008 வரை 486 ஏக்கர் நிலத்தை வாங்க தம்பி, பஹ்வாவின் சேவைகளைப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
"ராபர்ட் வதேரா 2005-2006 வரை எச்.எல் பஹ்வாவிடமிருந்து அமிபூரில் 334 கனல்கள் (40.08 ஏக்கர்) மதிப்புள்ள நிலத்தை வாங்கியதையும், அதே நிலத்தை டிசம்பர் 2010 இல் பஹ்வாவுக்கு விற்றதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். மேலும், ராபர்ட் வதேராவின் மனைவி பிரியங்கா காந்தி வதேராவும் ஏப்ரல் 2006 இல் பஹ்வாவிலிருந்து அமிபூர் கிராமத்தில் 40 கனல் (5 ஏக்கர்) விவசாய நிலத்தை வாங்கி, அதே நிலத்தை பிப்ரவரி 2010 இல் பஹ்வாவுக்கு விற்றார்" என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், "ராபர்ட் வதேரா முழு விற்பனைப் பணத்தையும் பஹ்வாவுக்கு செலுத்தவில்லை என்பதும் கவனிக்கப்பட்டது, இது தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது" என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வதேராவுக்கும் தம்பிக்கும் இடையிலான பிற நிதி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களையும் அமலாக்கத் துறை வழங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, தம்பி வதேராவிடமிருந்து ஒரு லேண்ட் க்ரூஸர் காரை வாங்கியதாகவும், அதற்காக அவரது என்.ஆர்.இ கணக்கிலிருந்து காசோலைகள் மூலம் பணம் செலுத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தியாளர், ராபர்ட் வதேரா மற்றும் பிரியங்கா காந்தியை கருத்துக்களுக்காக அணுகினார், ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
டாபிக்ஸ்