‘ஜாமின் வேண்டாம்.. ஜெயில் வேண்டும்’ கையெழுத்திட மறுத்து சிறை சென்ற பிரசாந்த் கிஷோர்!
பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரசாந்த் கிஷோர், திங்கட்கிழமை காலை தன் ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.
ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் திங்கட்கிழமை, தான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், ஜாமீன் உத்தரவில் எந்தத் தவறும் செய்யமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ஜாமீன் உத்தரவில் கையெழுத்திட மறுத்து சிறைக்குச் சென்றதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீகார் பொதுச் சேவை ஆணையத்தின் (BPSC) முதற்கட்டத் தேர்வில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, தேர்வை ரத்து செய்யக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிஷோர், திங்கட்கிழமை காலை தன் ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது,
போலீசார் மீது பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
“நான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், எனக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால், உத்தரவில் நான் எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று எழுதப்பட்டுள்ளது, அதனால் நான் இந்த ஜாமீன் உத்தரவை நிராகரித்தேன், சிறைக்குச் செல்ல ஒப்புக்கொண்டேன்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
அவர் பீகார் போலீசார் மீது, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார், “காலை 5-11 மணி வரை, நான் காவல் வாகனத்தில் உட்கார வைக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் பலமுறை கேட்டபோதும், நான் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறேன் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை.” என்று குற்றம்சாட்டினார்.
ஜன் சூராஜ் கட்சி விளக்கம்
X இல் ஒரு பதிவில், ஜன் சூராஜ் கட்சி கூறியதாவது, “காவல்துறை நிர்வாகம் பிரசாந்த் கிஷோரை காந்தி மைதானத்திலிருந்து எய்ம்ஸுக்கு அழைத்துச் சென்று அவரது உண்ணாவிரதத்தை முறிக்க முயன்றது. உண்ணாவிரதத்தை முறிக்கத் தவறிய நிர்வாகம், பிரசாந்த் கிஷோரை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே பிரசாந்த் கிஷோரைப் பார்க்கக் கூடியிருந்த கூட்டத்தினரை போலீசார் கொடூரமாக லத்தியால் தாக்கினர்.” என்று கூறியுள்ளது.
கார்டனி பாகில் இருந்து மாறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுகளை பிரசாந்த் கிஷோர் புறக்கணித்ததாகவும், பலமுறை நினைவூட்டியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
பிபிஎஸ்சி தேர்வில் உள்ள முறைகேடுகளை நிவர்த்தி செய்ய ஜனவரி 7 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாகவும் கிஷோர் அறிவித்திருந்தார்.
டாபிக்ஸ்