HBD Asaduddin Owaisi: ’நாட்டின் எதிரிகள் முஸ்லீம்களின் எதிரிகள்’ சர்ச்சைகளின் நாயகன்! யார் இந்த அசாதுதீன் ஓவைசி?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Asaduddin Owaisi: ’நாட்டின் எதிரிகள் முஸ்லீம்களின் எதிரிகள்’ சர்ச்சைகளின் நாயகன்! யார் இந்த அசாதுதீன் ஓவைசி?

HBD Asaduddin Owaisi: ’நாட்டின் எதிரிகள் முஸ்லீம்களின் எதிரிகள்’ சர்ச்சைகளின் நாயகன்! யார் இந்த அசாதுதீன் ஓவைசி?

Kathiravan V HT Tamil
Published May 13, 2023 05:50 AM IST

ஓவைசியின் அரசியல் செயல்படுகளும், பேச்சுகளும் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற அரசியலில் முக்கிய முகங்களில் ஒன்றாக உள்ளார் அசாதுதீன் ஓவைசி.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி (PTI)

அரசியல் குடும்பம்

இந்தியாவில் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி பேசும் முக்கிய அரசியல் முகமாக உள்ள அசாதூதீன் ஓவைசி இன்று தனது பிறந்தநாளை காணுகிறார். 1969ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஓவைசி.

ஹைதராபாத்தில் நடந்த தொழுகை கூட்டம் ஒன்றில் அசாதுதீன் ஓவைசி
ஹைதராபாத்தில் நடந்த தொழுகை கூட்டம் ஒன்றில் அசாதுதீன் ஓவைசி (PTI)

தற்போது அவர் தலைவராக உள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியை அவருடைய தாத்தாவான அப்துல் வாஹெத் ஒவைசி தொடங்கினார். இவரது தந்தையான ஒவைசி சுல்தான் சலாவுதீன் ஓவைசி 1984ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர்.

வேகப்பந்து வீச்சாளர்

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த ஒவைசிக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது தனிப்பிரியம் உண்டு. 1994ஆம் ஆண்டு விஸ்லி டிராப்பில் வேகப்பந்து வீச்சாளராக தென் மண்டல பல்கலைக்கழக அணியில் விளையாடினார். பின்னர் லண்டனில் சட்டம் பயின்ற ஓவைசி, 1996ஆம் ஆண்டு ஃப்ர்ஹீன் ஓவைசியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

சார்மினார் எம்.எல்.ஏ

1994ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய ஓவைசி 1967ஆம் ஆண்டு முதல் அவரது கட்சி வெற்றி பெற்றுவரும் சார்மினார் தொகுதியில் போட்டியிட்டு ஆந்திர சட்டமன்றத்திற்கு சென்றார். அடுத்து நடந்த 1999ஆம் அண்டு நடந்த தேர்தலிலும் அத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.

தந்தையின் வழியில் டெல்லி பயணம்

தனது தந்தையின் அரசியல் ஓய்வுக்கு பிறகு 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 70 சதவீத முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றம் சென்றார். அன்று தொடங்கி தற்போது வரை அதே தொகுதியில் இருந்து 4ஆவது முறையாக வென்று நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர், தலித், பழங்குடி மக்களின் குரலாக ஒலித்து வருகிறார்.

சன்சத் ரத்னா

டெல்லியில் அசாதுதீன் ஓவைசி
டெல்லியில் அசாதுதீன் ஓவைசி (PTI)

2013 பாராளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2014ஆம் ஆண்டு அவருக்கு சன்சத் ரத்னா விருது (பாராளுமன்ற உறுப்பினர்களின் ரத்தினம்) விருது வழங்கப்பட்டது. அக்காலத்தில் நாடாளுமன்றத்தில் 1080 கேள்விகளை எழுப்பி இருந்தார். இது தேசிய சராசரியான 292 உடன் ஒப்பிடும்போது 70% அதிகம்.

அரசியல் விமர்சனங்கள்

இந்திய பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவுடன் ஒப்பிட்டு வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த ஓவைசி “என்னுடைய போராட்டம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டது” என தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்ற ஜாகியுர் ரஹ்மான் லக்வி, ஹபீஸ் சையத் ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்ற ஓவைசி ’நாட்டின் எதிரிகள் முஸ்லீம்களின் எதிரிகள்’ என்றார். மேலும் அவரது அரசியல் மேடைகளில் ‘நான் இந்துக்களின் எதிரி அல்ல; இந்துத்துவத்தின் எதிரி’ என தனது சித்தாந்த நிலைப்பாட்டை பற்றி அவர் விளக்கி உள்ளார்.

ஓவைசியின் அரசியல் செயல்படுகளும், பேச்சுகளும் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற அரசியலில் முக்கிய முகங்களில் ஒன்றாக உள்ளார் அசாதுதீன் ஓவைசி.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.