Fact Check: ஹரியானாவில் பிரதமர் மோடி காலி இருக்கைகளைப் பார்த்து உரையாற்றினாரா? - வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check: ஹரியானாவில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி காலி இருக்கைகளை பார்த்து பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை (மே 18) ஹரியானா மாநிலம் அம்பலாவில் நடந்த பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மோடி காலி இருக்கைகளை பார்த்து பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
வைரல் வீடியோ
ஹரியானாவில் பிரதமர் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இத்தேடலில் @Anti_CAA_23 என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் “மோடி குப்பை பேச்சை கேட்க மக்கள் தயாராக இல்லை. புனேவில் மோடி கலந்துக்கொண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டமின்றி கிடந்த காலி சேர்கள்” என்று குறிப்பிட்டு இதே வீடியோவை மே 01, 2024 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதேபோல் @ASHOK_TN24 என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்திலும் மே 02, 2024 அன்று இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
நடந்தது என்ன?
இதனையடுத்து தேடியதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்ட புனே பொதுகூட்டத்தின் முழு வீடியோ மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 29, 2024 அன்று லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் நீல நிற மேலுடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து மோடி அவ்வீடியோவில் பேசுவதை காண முடிந்தது.
மேலும் இவ்வீடியோவின் 54:20 நேரத்தில் பிரதமர் மோடி பேசும் வார்த்தைகள் வைரலாகும் வீடியோவில் மோடி பேசும் வார்த்தைகளுடன் ஒற்றுப்போவதை நம்மால் காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ கடந்த மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே இந்த வீடியோவுக்கும் ஹரியானா பொதுக்கூட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.
உண்மை என்ன?
மேலும் மோடி யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில் 59ஆவது நிமிடத்தில், அதாவது வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டதாக கருதப்படும் நேரத்திற்கு (54:20) பிறகு மோடி பேச்சை அதிக மக்கள் உட்கார்ந்து கேட்பதாக இருப்பதை காண முடிகின்றது. இதுத்தவிர்த்து வீடியோவின் 6:52, 21:48, 29:40, 39:37 என பல நேரங்களில் பெரும் கூட்டம் இருப்பதை காண முடிகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கையில் மோடி கூட்டத்திற்கு கூட்டம் வரவில்லை எனும் வாதம் ஏற்புடையதாக இல்லை.
முடிவு
ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது கடந்த மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்