மோடி-கார்னி சந்திப்பு: இந்தியா-கனடா உறவில் புதிய திருப்பம் வருமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன?
ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து பேசியது, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான உறவில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நட்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் அருமையான சந்திப்பு இருந்தது. ஜி 7 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள கனடா அரசுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. பிரதமர் கார்னியும், நானும் இணைந்து இந்தியா-கனடாவுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்." எனப் பதிவிட்டுள்ளார்.
மோடி, கார்னி சந்திப்பு குறித்து கனடாவிற்கான முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா கூறுகையில், இந்த ஆண்டு முறிந்த அரசியல் உறவை இயல்பாக்குவதற்கு ஒரு நடைமுறை அணுகுமுறையை இரு நாடுகளும் பின்பற்றி உள்ளன. ஜி7 மாநாட்டின் இடையே, இரு நாட்டு பிரதமர்களும் உறவை புதுப்பிக்க ஒரு சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இதன் மூலம் வலுவான பொருளாதார உறவுகள் அரசியல் உறவுகளை மேம்படுத்தும்.இது உறவுகளை படிப்படியாக நிலைப்படுத்தவும், பின்னர் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களால் வழிநடத்தப்பட்டு, எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பான ஒரு சிறந்த கூட்டாண்மையை உருவாக்கவும் உதவும் என்று பிசாரியா கூறினார்.