PM Modi hails Budget 2024: செழிப்பின் பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்! வாழ்த்தி தள்ளும் பிரதமர் மோடி!
PM Modi hails Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024க்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
9 முன்னுரிமைகள்
ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என தெரிவித்த அவர், காலநிலையை எதிர்க்கும் விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்ற அவர், உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.
விலைவாசி கட்டுக்குள் உள்ளது
32 வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு புதிய 109 அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை எதிர்க்கும் விதைகளை அரசாங்கம் வெளியிடும் என்ற அவர், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி. 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் . அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது .
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். தனி நபர்களுக்கான வருவாயில் ரூ.3 லட்சம் வரை வரி விதிப்பு கிடையாது. ரூ.3-ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வதி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
பிரதமர் மோடி பாராட்டு
பட்ஜெட் குறித்து வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். அதில், “இந்த பட்ஜெட் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் பலப்படுத்துகிறது. இது நாட்டின் ஏழைகள், கிராமம் மற்றும் விவசாயிகளை செழிப்பின் பாதையில் அழைத்துச் செல்கிறது,” என்று பிரதமர் வீடியோ செய்தியில் கூறினார்.
வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கும்
“கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தும் வகையில் உள்ளது. இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பட்ஜெட்டில் இருந்து கல்வி மற்றும் திறமைக்கு புதிய அளவுகோல் கிடைக்கும். இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு, நடுத்த தொழில்களுக்கு உதவும்” என்று மோடி கூறி உள்ளார்.
கல்விக்கு முக்கியத்துவம்
கல்வி மற்றும் திறமைக்கு புதிய அளவீடுகளை இது வழங்கும் என்று கூறி உள்ள பிரதமர் மோடி “இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் புதிய பலத்தைக் கொடுக்கும். பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை வலுப்படுத்தும் நோக்கில் வலுவான திட்டங்களுடன் வந்துள்ளது. இந்த பட்ஜெட் நிதி பங்களிப்பை உறுதிப்படுத்த உதவும்” என்று பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
வேலை வாய்ப்பு
"இந்த பட்ஜெட்டில், 'வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்' என, அரசு அறிவித்துள்ளது. இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். இத்திட்டத்தின் கீழ், புதிதாக பணிக்கு வருபவர்களுக்கு, அரசு முதல் சம்பளம் வழங்கும். கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் நாட்டின் சிறந்த நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும்." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாபிக்ஸ்