Arvind kejriwal: ’திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்!’ இந்த மூன்று புத்தங்கள் வேண்டும் என்று அடம்!
”டெல்லி கலால் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது”
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், "இந்த சர்வாதிகாரத்திற்கு நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள்" என கூறி உள்ளார்.
கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிடக் கோரிய அமலாக்கத்துறை இயக்குநரகம், கைது செய்யப்பட்டவர் ஆம் ஆத்மியின் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக தவறான மற்றும் முரண்பாடான ஆதாரங்களை அளித்துள்ளார் என்று கூறி உள்ளது.
கெஜ்ரிவால் மீதான விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, அவரை வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் புத்தகங்களை எடுத்துச் செல்ல கெஜ்ரிவாலை அனுமதிக்குமாறு நீதிமன்றம் திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி ஒரு மேஜை மற்றும் நாற்காலி, ஒரு மத லாக்கெட் மற்றும் ஒரு சிறப்பு உணவை வழங்குமாறு நீதிமன்றம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.
கெஜ்ரிவால், தனது வழக்கறிஞர்கள் மூலம், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் நீரஜா சவுத்ரி எழுதிய "How Prime Minister Decided" என்ற புத்தகத்தை சிறைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் என கோரி உள்ளார்.
கலால் கொள்கை வழக்கு தொடர்பாக மார்ச் 21 ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், நீதிமன்ற உத்தரவின் பேரில் 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தார்.
முன்னதாக, கலால் கொள்கையை உருவாக்குவதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டதாக அந்நிறுவனம் கூறியது.
"டெல்லி மதுபான ஊழலின் முழு சதியிலும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்ந்த முறையில் ஈடுபட்டுள்ளார், இதில் கொள்கை வடிவமைக்கப்பட்டு சில தனிப்பட்ட நபர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது" என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் பணியில் இருக்கும் முதல்வர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மொத்தம் ஒன்பது சம்மன்களை கெஜ்ரிவால் தவிர்த்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.