சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாக்., திட்டம்.. அப்படி நடந்தால் என்ன நடக்கும்? ஒப்பந்தம் முதல் பின்விளைவு வரை முழு தகவல்
சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கமிட்டியின் (என்.எஸ்.சி) அவசர கூட்டத்தை ஷெபாஸ் ஷெரீப் இன்று கூட்டியுள்ளார். சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? அதை விளக்கினால் யாருக்கு சாதகம்? பாதகம்?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளன. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலமும், பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா தள்ளுபடி திட்டத்தை (எஸ்.வி.இ.எஸ்) ரத்து செய்வதன் மூலமும் இந்திய அரசாங்கம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் விரும்பத்தகாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் கோபமடைந்த பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்யும் விவாதத்தை தொடங்கியுள்ளது.
சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து விவாதிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வியாழக்கிழமை காலை தேசிய பாதுகாப்புக் குழுவின் (என்.எஸ்.சி) அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் கூறுகையில், "இந்தியாவின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது,’’ என்று கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு தொலைக்காட்சி சேனலில் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த வன்முறை "உள்நாட்டு கிளர்ச்சியின்" விளைவாகும் என்றும் கூறினார்.
