NDA VS INDIA: ‘மோடியா? ராகுலா? யாருக்கும் பெரும்பான்மை இல்லை! இன்று என்ன நடக்கும்?’ சதுரங்க வேட்டை வியூகம்!
NDA vs INDIA: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்றைய தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத சூழல் உருவாகி உள்ளது.
யார் யார் எத்தனை தொகுதிகளில் வெற்றி?
240 தொகுதிகளில் வென்று பாஜக தனி பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாவாதி கட்சி 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 7 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 4 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி 3 இடங்களிலும், ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், சிபிஐ.எல்.எல் கட்சி 2 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும், சிபிஐ கட்சி 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இணைந்து 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு டிமாண்ட்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.
நாயுடு, நிதிஷுக்கு இந்தியா கூட்டணி அழைப்பா?
தேர்தல் வெற்றி தொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரை கூட்டணிக்குள் அழைப்பது குறித்து இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி கட்சிகளிடம், ஆலோசித்தபின் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
நாயுடு, நிதிஷிடம் பேசிய சரத்பவார்?
இந்தியா கூட்டணியில் இணையுமாறு சந்திரபாபு நாயுடுவிடம் காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார் பேசி உள்ளதாகவும், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் பேசி உள்ளதாகவும் ஊடங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இந்தியா கூட்டணி கூட்டம்
இந்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் இந்தியா கூட்டணி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் டெல்லி சென்று அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கும் பாஜக அழைப்புவிடுத்து உள்ளது.
ஆட்சி அமைக்க பாஜகவை குடியரசுத் தலைவர் அழைக்க வாய்ப்பு
240 தொகுதிகள் உடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதலில் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.