வடமாநில தொழிலாளர் குறித்த விடியோ - தமிழக போலீசாரால் தேடப்பட்ட யூடியூப்பர் சரண்
Migrant workers row: வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவது குறித்து போலி விடியோ பரப்பியதாக தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த யூடியூப்பர் பிகார் போலீசிடம் சரணடைந்துள்ளார்.
பிகார் உள்பட வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகைப்படங்கள், விடியோக்கள் வெளியாகின. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சிகள் பல இதற்கு கண்டனம் தெரிவித்தன.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த விவகாரம் பிகார் சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், தமிழ்நாடு சென்று ஆய்வு நடத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சிறப்பு குழுவை அனுப்பி வைத்தார். தமிழ்நாடு வந்த சிறப்பு குழுவினர் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை அளித்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வதந்தி பரப்பியவர்களை தேடி தமிழகத்தில் இருந்து தனிப்படை போலீசார் பிகார், டெல்லிக்கு சென்றனர். இதில் வடமாநில தொழிலாளர்கல் தாக்கப்படுவதாக போலி விடியோ பரப்பிய பிகாரை சேர்ந்த அமன் குமார, ராகேஷ், உமேஷ் மகோடா உள்பட சிலரை போலீசார் கைது செயதனர். சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
பிகாரில் ஜக்கன்பூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் விடியோ எடுத்து பரப்பி வருவது தெரியவந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிகார் போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் போலி விடியோ பரப்பியதாக யூடியூப்பர் ஒருவர் தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஜெகதீஷ்பூர் பகுதியை சேர்ந்த காவல்நிலையத்தில் யூடியூப்பர் மணீஷ் காஷ்யப் என்பவர் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் போலீசில் சரணடைந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பண மோசடி உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மணீஷ் காஷ்யப் ஏற்கனவே முன்ஜாமின் கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மணீஷ் காஷ்யப்பு அலுவலம், வீடுகளில் சோதனை நடத்திய பிகார போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து மணீஷ் காஷ்யப் தற்போது போலீசில் சரணடைந்துள்ளார்.
முன்னதாக, வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்கள் அனைத்தும் போலியானவை என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர். அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் அவர்களுக்கு எங்கு இருந்தாலும் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்ததோடு, அதற்கான புகார் எண்களும் வெளியிடப்பட்டன.
இதுதொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியம் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கலிலும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களிலும் முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாநில தொழிலாளர்கல் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.