மூதாட்டி வேடமிட்ட நபர் மோனாலிசா ஓவியம் மீது கேக்கை பூசியதால் பரபரப்பு - வீடியோ
பாரிசில் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் மீது கேக் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸ்: மூதாட்டி போல் உடையணிந்து வந்த ஒருவர் பாரிஸ், லூவ்ரேய் அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லூவ்ரேய் அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஓவியத்தை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்த ஓவியத்தை பார்க்க சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். ஓவியம் அருகே அமர்ந்து அவர் சில நிமிடம் கண் இமைக்காமல் உற்று பார்த்துக்கொண்டு இருந்தார்.
திடீரென நாற்காலியிலிருந்து குதித்து விக்கை தூக்கி எறிந்துவிட்டு மோனாலிசா ஓவியத்தின் கண்ணாடியை உடைக்க முயன்றுள்ளார். ஆனால், அவரால் முடியவில்லை. இதனால், தனது பாக்கெட்டில் இருந்த கேக்கை வெளியே எடுத்து அந்த கண்ணாடி மீது பூசினார். இருப்பினும் பாதுகாப்பு கண்ணாடி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் சேதமடையவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனே அங்கு வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்ததில் அந்த நபர் மூதாட்டியே இல்லை என்பது தெரியவந்தது. அந்த நபர் தலையில் விக் வைத்து மூதாட்டி போல் உடையணிந்து ஏமாற்றி உள்ளே வந்திருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பிரான்ஸ் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருங்காட்சியகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறையில் அந்த நபர் எப்படி நுழைந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். கேக் பூசப்பட்ட ஓவியத்தை அங்கிருந்த பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மோனாலிசா ஓவியம் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 1956 ஆம் ஆண்டில், மோனாலிசா ஓவியத்தின் மீது ஒருவர் கந்தக அமிலத்தை வீசினார். இதனால் ஓவியத்தின் கீழ் பகுதி கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் மோனாலிசா ஓவியம் குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
