Sabarimalai: சபரிமலையில் பொன்னம்பலமேட்டில் தோன்றிய ஜோதி; பக்தர்கள் சரணகோஷம்
சபரிமலையில் மகரஜோதியாக ஐயப்பசுவாமி காட்சியளித்தார்.
சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதி தோன்றியது; லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க ஜோதி வடிவில் தோன்றிய ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக சந்நிதானம் கடந்த 2023ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் அனுதினமும் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் ஐயப்பனின் சந்நிதானம் சுமார் 18 மணிநேரம் வரை திறக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு வேளையும் பல்வேறு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று மாலை 6:47 மணிக்கு நடைபெற்றது. இதற்காக காலை 2:46 மணிக்கு ஐய்யப்பனின் சந்நிதானம் திறக்கப்பட்டு மகர சங்கர பூஜை செய்யப்பட்டு, நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் நண்பகல் ஒருமணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
தோராயமாக 6:30 மணிக்கு திருவாபரணப்பெட்டி சபரிமலை சந்நிதானம் வந்து அடைந்தது. அதன்பின்னர் ஐயப்பனுக்கு, அந்த திருவாபரணங்கள் போட்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தோராயமாக மாலை 6:47 மணிக்கு சபரிமலை சந்நிதானத்துக்கு எதிரிலுள்ள பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தோன்றியது. இங்கு மகரஜோதியாக ஐயப்பன் காட்சி அளித்தார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்போது சரண கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
இந்த மகர ஜோதி தரிசனத்தைக் காண, கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகரஜோதி தரிசனத்தை முடித்த பக்தர்கள் இன்றும் நாளையும் ஐயப்பனின் சந்நிதானம் சென்று, இருமுடி இறக்கி மணிகண்டனை தரிசித்துவிட்டு வீடு திரும்புவர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்