Income Tax: ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Income Tax: ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?

Income Tax: ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Mar 29, 2025 12:08 PM IST

எதிர்பாராத திருப்பமாக, மத்திய பிரதேசத்தின் பத்தாரியா நகரைச் சேர்ந்த ஒரு சிறிய முட்டை விற்பனையாளர் ஆபத்தான நிதி விசாரணையின் மையத்தில் சிக்கி இருக்கிறார்.

ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?
ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தின் பத்தாரியா நகரில் சிறிய அளவில் முட்டை விற்பனை செய்து வருபவர் பிரின்ஸ் சுமன். கை வண்டியில் முட்டை விற்பனை செய்து வரும் பிரின்ஸ் சுமன், வருமான வரித்துறை அவரிடம் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி நடவடிக்கைகள் குறித்து விசாரணை நோட்டீஸ் அனுப்பியதில் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து அவரது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வோடு இவ்வளவு பெரிய தொகை எப்படி தொடர்புடையது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் சிக்கிய பிரின்ஸ், இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துள்ளார்.

சுமார் ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்

இந்த மர்மத்தைத் தீர்க்க, அவர் உள்ளூர் அதிகாரிகளிடம், டமோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பலரிடமும் புகார் அளித்தார். ஆனால் அதன் பின்னரும் அதிர்ச்சி காத்திருந்தது. மார்ச் 20 அன்று வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில், மொத்தம் ரூ.49 கோடி 24 லட்சம் 57 ஆயிரம் 217 வர்த்தக நடவடிக்கைகளின் விரிவான விவரங்களை வழங்கக் கோரியுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான பில்கள், வவுச்சர்கள், போக்குவரத்து பதிவுகள் மற்றும் வங்கி அறிக்கைகள் போன்ற ஆவணங்களை வழங்க துறை கோரியுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளுடன் தான் எப்படி தொடர்புடையவர் என்பதை பிரின்ஸால் நம்ப முடியவில்லை.

விசாரணையில், பிரின்ஸின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 'பிரின்ஸ் என்டர்பிரைஸ்' என்ற நிறுவனம் 2022 டிசம்பரில் டெல்லியில் அவரது பெயரில் மோசடி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி முறையில் ஜிஎஸ்டி எண் பெறப்பட்டுள்ளது. பின்னர் அந்த நிறுவனம் கோடிகளில் நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டு, திடீரென மூடப்பட்டது. அந்த நிறுவனத்தின் முகவரி டெல்லி, ஜான்டேவாலன், பிட் டெட் பேக்டரி காம்பிளக்ஸ், ஷாப் நம்பர் D 31, பிளாட்டட் பேக்டரி, மண்டலம் 3, வார்டு 33 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரின்ஸுக்கு இந்த முழு சம்பவமும் ஒரு கனவு போல இருந்தது. பத்தாரியாவைச் சேர்ந்த எளிய முட்டை விற்பனையாளர், தனக்குத் தெரியாத மோசடி வலையில் சிக்கியுள்ளார்.பண மோசடிக்காக அடையாள திருட்டுச் சம்பவங்கள் மத்திய பிரதேசத்தில் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. இதில் இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வளர்ந்து வரும் மோசடியின் அளவை விசாரணை அதிகாரிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர். பிரின்ஸ் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க போராடுகின்றனர்.