RG Kar Doctor Case: நாடே உற்று நோக்கிய கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
RG Kar Doctor Case: தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, குற்றவாளி சஞ்சய் ராய் அழைத்து வரப்பட்டதால், கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கிட்டத்தட்ட 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

RG Kar Doctor Case: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சந்தேக நபர் சஞ்சய் ராயை குற்றவாளி என கொல்கத்தா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிசிடிவி காட்சிகள், பயோலாஜிக்கல் மாதிரிகள் ஆகிய ஆதாரங்கள் சஞ்சய் ராயே குற்றவாளி என்பதை நிரூபிக்கிறது என்று நீதிமன்றம் கூறி அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. முன்னதாக, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என முறையிட்டது. நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த சஞ்சய் ராய், ‘தான் நிரபராதி, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை’ என்று மீண்டும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு தழுவிய சீற்றம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்களின் வேலைநிறுத்தங்களைத் தூண்டிய ஒரு கொடூரமான குற்றமாகும். துரித கதியில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
