Karnataka: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்! எவ்வளவு தொகை தெரியுமா?
பல்வேறு திட்டங்களில் தமிழ்நாட்டை பின்பற்றும் மாநிலமாக இருந்து வரும் கர்நாடகா, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வரும் தமிழ்நாடு அரசின் திட்டத்தை யுவா நிதி என்ற பெயரில் அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியாக, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்திர உதவி தொகையாக ரூ. 3 ஆயிரம், டிப்ளமோ பயின்றவர்களுக்கு ரூ. 1,500 உதவி தொகையாக வழங்கப்படுகிறது.
யுவா நிதி திட்டம் என்ற அழைக்கப்படும் இத்திட்டத்தில், பயனாளர்களிடம் காசோலையை வழங்கினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. 2022-23ஆம் கல்வியாண்டில் பட்டம் பயின்று முடிந்த பட்டதாரிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை வழங்க தொடங்கப்பட்டுள்ளது. பட்டம் பயின்று முடிந்து 180 நாள்களுக்கு மேல் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் யுவா நிதி திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி தொகையானது இரண்டு ஆண்டு காலம் வரை மட்டும் வழங்கப்படும் எனவும், பயனாளருக்கு வேலை கிடைத்தவுடன் உதவி தொகை வழங்குவது நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மேல்படிப்புக்காக விண்ணப்பித்து, படிப்பை தொடர்கிறவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
நடப்பு நிதியாண்டில் யுவா நிதி திட்டத்துக்காக கர்நாடக அரசு ரூ. 250 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ. 1,200 கோடி வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை பெறும் பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்போம். இந்த திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும்.
தனியார் அல்லது அரசு வேலை கிடைத்தால் உடனடியாக பலன் நிறுத்தப்படும். எந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை திறன் மேம்பாட்டு துறை முடிவு செய்யும்" என்று திட்டம் தொடங்கிய முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.
ஆட்சி அமைப்பதற்கு முன்பு 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்திருந்தது ஆளும் காங்கிரஸ் கட்சி. அதில், கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 10 கிலோ இலவச அரசி, 200 யுனிட் வரை வீடுகளுக்கு இலவச மின்சாரம், பெண் குடும்பத்தலைவியாக இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஊக்க தொகை என நான்கு வாக்குறுதிகளை ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஐந்தாவது வாக்குறுதியாக வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு உதவி தொகை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9